Saturday, March 3, 2012

சமகம்

சமகம்
ராகம் : செஞ்சுருட்டி மெட்டு : அருணகிரி நாதரின் திருப்புகழ் - நாத விந்து கலாதி நமோ நம..!

அனுவாகம் 1

உணவை அளித்திட இறையை நான் நாடினேன்
புசித்து மகிழ்ந்திட அனுமதி கோரினேன்
இரையில் விழைவையும் தூய்மையும் நாடினேன்
மகிழ்ந்தே அருள்வாயே..!

சீரணம் செய்திடு நான்தின்ற உணவினை
பூரணம் ஆக்கிடு நான் கொண்ட உணர்வினை
காரணம் காணாமல் அளிப்பாய் நீ அருள்தனை
அருளின் அருள் நீயே..!

வேதமந்திரம் இசையோடு ஓதவே
நாதச் சந்தமும் என் நாவில் கூடவே
நாதன் உன்பதம் பணிந்தே நான் நாடினேன்
போதம் அருள்வாயே..!

வ்யானப் பிராண அபானத்தின் வாயுவும்
முக்கிய மானநல் காற்றோடு ஓட்டமும்
உதானச மானத்தின் வாயுக்கள் யாவுமே
இயங்கிட அருள்வாயே..!

தோன்று கின்றநல் ஒளியாக ஞானமும்
கூற்றில் எழுகின்ற சொல்கொண்ட வேகமும்
கூடி இசைகின்ற இசைவோடு சித்தமும்
நாடினேன் அருள்வாயே ..

கூர்மைச் செவியோடு நேர்கொண்ட பார்வையும்
சீரின் சிறப்பொடு இயங்கும் ஐம்புலன்களும்
ஓங்கி வளர்கின்ற *ஒஜத்தின் தேஜசும்
பாங்காய் அருள்வாயே..!

திண்மை உடைத்தான பலம் கொண்ட ஆண்மையும்
பகையை முடிக்கின்ற வேகத்தின் எழுச்சியும்
சிகையும் நரைத்திட்ட வயதான முதுமையில்
மேன்மையும் அருள்வாயே..!

மனதில் இடம் கொண்ட திடமான நம்பிக்கை
த்யானத்தில் மகிழ்கின்ற விதமான தோர்யாக்கை
தர்மம் காக்கின்ற பிறப்பான தோர்வாழ்க்கை
என்றும் அருள்வாயே..!

அனுவாகம் 2

மனம்தனை மாந்தரில் மாணிக்கம் ஆக்கிடு
சினம்தனை எழும்பாமல் இருந்திடக் காத்திடு
மேன்மையில் உடைத்தான குணங்களைக் கொடுத்திடு
வேண்டியும் கேட்பேனே..!

குடித்திடச் சுவையான நீர் நிலை தந்திடு
அழித்திடும் விதமாகப் பகைதனைக் களைந்திடு
மகிழ்ந்திடச் செல்வமும் புகழும் நீ தந்திடு
விடைமேல் இருப்போனே..!

சிறந்தநல் செல்வங்கள் நிறைவாகக் கொடுத்திடு
பிறந்திடும் செல்வங்கள் நலம்பட வைத்திடு
மறைபொருள் விளங்கிடும் ஞானத்தை நல்கிடு
இறையின் இறை நீயே..!

குறைதலும் இல்லாத சந்ததி அளித்திடு
குறைகளும் இல்லாத விதம் தனில் அளித்திடு
நிறைந்திடும் ஞானத்தில் அவரைநீ வைத்திடு
ஒளியின் ஒளி நீயே..!

அடக்கம் ஒழுக்கமும் அடக்காமல் அளித்திடு
ஓதிடும் வேதத்தில் நம்பிக்கை நல்கிடு
அசைகிற அசையாதச் சொத்துக்கள் அளித்திடு
தாயும் ஆனவனே ..!

விலைமிக்கத் தங்கமும் ஒளிமிக்க வெள்ளியும்
நிலைக்கின்ற நிதியாக பதியே நீ தந்திடு
மலைத்திடும் அழகான உடல்தன்னைத் தந்திடு
நிலைத்திடும் அழகே நீ..!

களித்திடும் விதமாக விளையாட்டைத் தந்திடு
குளித்துமே ஓதிடும் வேதத்தை மனத்திடு
விளித்துமே செய்திடும் யாகத்தில் மகிழ்ந்திடு
தெளிவின் தெளிவே நீ..!

கடந்த காலத்தில் நான் பெற்ற செல்வமும்
வருகின்ற காலத்தில் பெறலாக வளங்களும்
மனமகிழ் விதமாக ஓய்ந்திட விடுதியும்
மகிழ்ந்தே அருள் நீ யே ..!

பயமின்றி சென்றிடக் காப்பான பாதையும்
சுயமின்றி மனதினில் நல்லெண்ணம் கூடிடும்
இகத்திலும் பரத்திலும் இசைகூட்டும் ஆன்மிகம்
சிறப்பாய் அருள்வாயே..!

வாழ்க்கையின் தேவைகள் அளித்தே என்பயணத்தை
மகிழ்விலும் சுகத்திலும் கழித்தே நான் செய்திட
கிடைத்ததைப் பயனுற உபயோகம் செய்திட
தடையற அருள்வாயே ..!

அளித்தநல் புத்தியில் சீரான கூர்மையும்
துளைத்திடும் இக்கட்டில் இடர்போக்கும் சாமர்த்யம்
சிரம்தனில் கர்வமும் சேராமல் யாவையும்
மகிழ்ந்தே அருள்வாயே..!

அனுவாகம் 3

மண்ணிலும் விண்ணிலும் மகிழ்ந்திடும் வாழ்க்கையும்
பொன்னிலும் பொருளிலும் சிறந்தோங்கும் செல்வமும்
விண்ணிலும் சிறப்பான நன்மைகள் யாவையும்
திண்ணமாய்த் தருவாயே..!

செழுமையும் வசதியும் நிறைவான செல்வமும்
பெருமையும் அத்ருஷ்டமும் மேலான புகழ்ச்சியும்
வீட்டில் பெரியோர்கள் வழிகாட்டி நடத்தலும்
கிட்டிடக் கொடுப்பாயே..!

மாட மாளிகை போலான வீடுகள்
கூடி இருந்திட தாய் தந்தை நண்பர்கள்
தேடிய செல்வத்தைக் காத்திடும் திறமையும்
கூடிட அருள்வாயே..!

மனதினில் அச்சமும் தோன்றாமல் செய்திடு
குணத்தினில் தைரியம் மறுக்காமல் வழங்கிடு
வீரத்தை தீரத்தை குறைக்காமல் கொடுத்திடு
வீரத்தில் சிறந்தோனே..!

சேவைகள் செய்கின்ற மனம்தனை மகிழ்ந்தளி
ஓதிடும் விதத்தினில் வேதத்தை உணர்த்திடு
சூதிலா சீடர்க்கு உரைத்திடும் திறம் கொடு
வேதத்தின் நாயகனே..!

சந்ததி மதித்திடும் ஒர்கதி அளித்திடு
சிந்தையில் சிவன் நாமம் ஒளிர்ந்திட அருளிடு
உன்தயை தன்னாலே பயிர்விளைத் திறம்கொடு
தந்தையே என் தாயே..!

நோயற்ற வாழ்க்கையை தூயா நீ தந்திடு
ஆயுளை நீட்டித்து அருள்தனைப் புரிந்திடு
இளமையில் சாகாத வரம் தனை வழங்கிடு
என்றும் இருப்போனே..!

பகைவரும் எதிர்ப்போரும் இல்லாத வாழ்க்கையும்
இரவினில் நன்றாகத் துயில்தரும் யாக்கையும்
வெற்றியை உடைத்தானக் காலையும் மாலையும்
போற்றிட அருள்வாயே..!

அனுவாகம் 4

சுவைத்துப் புசித்திட சிறப்பான உணவையும்
இனிப்புகள் கனிச்சாறு நெய்யும் தேன் பாலுடன்
ரசித்திட இதமான மொழிபேசும் நண்பரும்
மகிழ்ந்தே அளிப்பாயே..!

மாதம் மும்மாரி பொழிகின்ற மழைதனை
போகம் நன்றாக விளைகின்ற விளைச்சலை
சேதம் இல்லாத வளம்கொண்ட நிலத்தினை
நாதனே தருவாயே..!

வான்முட்டி நிற்கின்ற உயர்வான மரங்களில்
கண்குளிர் செய்கின்ற பசுங்கிளை இலைகளும்
தேன்சொட்டி வழிகின்ற மலர்கொண்ட செடிகளும்
நாட்டினில் அருள்வாயே..!

விலை மதிப்பில்லாத தங்கமும் வைரமும்
சிலையென அழகுடன் பிறந்திட்ட பேரரும்
தொலைவினில் இல்லாமல் சேர்ந்துமே காத்திட
அருள்செய் நீ ஈசா..!

அழகுடன் அமைந்திட்ட திடமான உடலுடன்
வளத்துடன் கிடைத்திட்ட தானியப் பயிர்களும்
களைத்துடல் போகாது உரத்தினில் வாழ்ந்திட
அருள்செய் நீ ஈசா..!

அனுவாகம் 5

கல்லும் மண்ணும் அழகான மலைகளும்
செல்லும் விதமாகப் பாய்கின்ற நதிகளும்
கொல்லும் நோய்போக்கும் மூலிகை மரங்களும்
அருள்வாய் நீ ஈசா..!

தங்கம் வெள்ளியும் ஈயமும் தகரமும்
தங்கும் இரும்பும் வெண்கலம் தாமிரம்
ஆனஉ லோகங்கள் யாவையும் நீயுமே
தருவாய் அருளாலே..!

தீயும் நீரும் செடிகொடி மரங்களும்
நிலத்தில் விளைந்திடும் பயிர்வகை தானியம்
விளைந்து பெருகிட நன்மைகள் தந்திட
அருள் செய் நீ ஈசா..!

யாகத்தில் அவியாகச் சொரிந்திடும் பொருள்களும்
லோகத்தில் மாந்தர்கள் வாழ்ந்திட உதவிடும்
நாலுகால் மிருகங்கள் பிராணிகள் யாவையும்
நன்கே அருள்வாயே..!

பேர்சொல்ல சந்ததி ஊர்சொல்ல வேநிதி
சேர்ந்திடும் பந்துக்கள் சேர்த்திடும் சொத்துக்கள்
காத்திடும் விதத்தினில் சேர்த்திடு திறத்தினை
அடைக்கலம் நீ ஈசா..!

வசதியாய் வாழ்ந்திட அழகான வீடுகள்
பிசகாமல் யாகத்தை செய்கின்ற திறமையும்
யாகத்தின் பலன்களை அடைகின்ற பெருமையும்
நாகா அருள்வாயே..!

இகத்தினில் மகிழ்ச்சியும் இணக்கமும் நல்கிடு
பரத்தினை அடைந்திடும் தகுதியைத் தந்திடு
மனதினில் உன்பதம் மறக்காத நினைவையும்
மகிழ்ந்தே அருள்வாயே..!

அனுவாகம் 6-7

விண்ணுல குறைந்திடும் இந்த்ராதி தேவரும்
எண்ணினில் தேவரின் இருபத்து ஐவரும்
கண்ணினில் நீர் முட்ட நான் துதித்தேற்றுவேன்
நன்மைகள் அருள்வாயே ..!

சோம யாகத்தை நடத்திடும் ஓர் திறம்
அம்சு முதலான யாகத்தின் பாத்திரம்
தேவர்கள் யாவரும் அருள்தரும் நல்தவம்
யாவையும் தருவாயே..!

அனுவாகம் 8-11

யாகம் நடத்திட சீர்மிகு திரவியம்
உயர்ந்தநல் இடத்துடன் மரங்களும் தருப்பையும்
அக்னியும் மந்திரம் சொல்கின்ற முனிவரும்
இறங்கி அருள்வாயே..!


பசுக்களின் கற்பத்தில் வளர்ந்திடும் கன்றுகள்
சித்திடும் விதத்தினில் இருந்திடும் காளைகள்
உழைத்திடும் உரத்துடன் வண்டியின் மாடுகள்
காத்தே அருள்வாயே..!

வளர்ந்திடும் விதமாக உணவை நீ அளித்திடு
தொடர்ந்திடும் விதமாக அதனை நீ செய்திடு
ரசித்திடும் விதமாக புசித்திடச் செய்திடு
ஈசா சர்வே சா..!

அண்டம் படைத்திங்கு எல்லாமும் ஆனவன்
அணுவின் உள்ளேயும் அணுவே நீ ஆனவன்
தொண்டரின் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன்
எம்மைக் காப்பாயே..!

சாந்தி

காமதேனுவின் மந்திர பூஜையும்
மனுவும் செய்கின்ற யாகத்தின் பலன்களும்
தேவர்கள் குரு சொல்லும் மேலான மந்த்ரமும்
காத்திட அருள்வாயே ..!

மனதின் தோன்றிடும் இனிப்பான எண்ணங்கள்
கொடுக்கும் விதமாக சிறப்பான விளைவுகள்
அருளும் விதமான மங்கலப் பேச்சுக்கள்
பலனாய்த் தருவாயே..!

பாடுமென் நாவினில் சிவனே நீ இருந்திடு
கேடிலா அருளினை இறைவா நீ தந்திடு
*வீடுறை தந்தையர் மனமகிழ் செய்திடு
காடுடை சிவன் போற்றி..!
*பித்ருக்கள்
போற்றி போற்றி நின் பாதங்கள் போற்றியே
வெற்றி வெற்றி எம் நெஞ்சில் நீ நின்றிட
*தெற்றித் தெற்றி உன் பாதங்கள் பற்றினேன்
முத்தியில் சேர் ப்பாயே..!
*தெற்றித் தெற்றி = மாயையில் உழன்று , தட்டுத் தடுமாறி
சாந்தி சாந்தி என்மனம் தன்னில் சாந்தியே
வேண்டி வேண்டி நான் அழைக்கின்றேன் தந்தையே
மண்டி மண்டி இருக்கின்ற இருள்தனை
நீக்கிடு ஒளி நீயே..!

சாந்தி சாந்தி சாந்தி
____________________No comments:

Post a Comment