பதஞ்சலி முனிவர் ஒருமுறை சிவ பெருமானின் தரிசனத்திற்கு சென்றபோது நந்தி பகவான் தன் கால்களாலும் கொம்பினாலும் மறைத்துத் தடுத்தார். பதஞ்சலி உடனே தீர்க்கம் எனப்படும் நெடிலும், சரண (கால்) & ஷ்ரிங்க(கொம்பு) இல்லாமலும் சரண ஷ்ரிங்க ரஹித (charaNashri.ngarahita) சந்தத்தில் பாட்டெழுதிப் படித்தார். இறைவன் மகிழ்ந்து பாட்டுச் சந்தத்திற்கு ஏற்றவாறு நடம் புரிந்தவாறே சிதம்பரத்தில் காட்சி கொடுத்ததாகப் புராணம்.
மூலப் பாடலைக் கேட்டால்தான் இதன் பெருமை விளங்கும்.
மூலப்பாடலை முதலில் இங்கு கேட்க
1
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
புரம்எரித் தவன்அவன் அகம்அழித் தவன்சிவன்
விரைமனம் படைத்தவர் மனம்கவர்ந் திழுப்பவன்
எடுத்தகால் வளைத்துமே நடம்புரிந் திருப்பவன்
கரத்திருந்த கங்கணம் அசைவினில் மனம்தனில்
மயங்கிடும் விதம்தனில் எழுந்திடும் ஒலித்தொனி
செவிப்படும் களிப்புமே விளங்குநல் களிம்புமே
பதஞ்சலி சிதம்தனில் ஒளிச்சுடர் விளக்கதே
சிதம்தனில் படும்விதம் அவன்அருள் விளக்குதே
கலங்குமென் மனம்தனில் விளங்குமாறு-செய்துமே
மலங்களும் இலையெனும் நிலைபெறும் மனத்திலே
தொடர்ந்திடும் விதம்வரும் பிறப்பிறப் பறுத்துமே
கடம்பிணை எழில்தனில் புனைதுகில்-அவ்வானமே
விடம்உடைத்த நீலகண்டம் நீருடைத்த மேகமே
சுத்தசத்..துணர்வினில் எழும்பிடும் சுடர்மணி
சித்தர்சித்..தலர்ந்திலங்க வந்தசூரி..யன்ஒளி
2
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
ஊழ்வகம் அழித்துமேல் பரம்தனை அளிப்பவன்
வீழ்ந்துமெய் தரைப்பட அரக்கனை அழித்தவன்
சூழுகின்ற மூவினை போன்றமுப் புரத்தினை
அழித்துமே எரித்தவன் வழுத்திடச் சிறந்தவன்
அனந்தனான பாம்பினைக் கரத்திலே அணிந்தவன்
மனம்எழும் அருள்மழை பொழிந்திடும் சிவன்இவன்
கணம்தனில் படைத்தழித்..துவென்றுமே நிலைப்பவன்
படைத்தநான் முகன்தனும் கணங்களோடவ் விந்த்ரனும்
தினம்இவன் பதம்தனை மனம்நினை சிவன்இவன்
பிறைமதிச் சிறப்புறும் ஒளிர்ந்திவன் சிரம்பட
3
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
சிறந்தபல் குணங்களில் உயர்ந்துமே இருப்பவன்
முயன்றநல் தவத்திலும் விளங்கிடா திருப்பவன்
நுதல்தனில் பிறைமதி சுடர்விடத் தரித்தவன்
சலச்சல வெனப்பெரும் ஒலிப்படச் சடைதனில்
பலத்துடன் விழுந்தபல் கங்கைகொண் டநீரலை
அடக்கியே சிறந்தவன் விடத்துடன் சிரிப்பவன்
யமன்தனின் தலைக்கனம் தனைத்தொலைத் தவன்இவன்
உழன்றிடும் உயிர்களின் பிறப்பிறப் பறுப்பவன்
பிறந்திடும் உயிர்களைக் புரந்துநிற்கு மரசவன்
தெரிந்தபல் திசைகளில் விரிந்திடும் கரத்தினில்
சிறந்தமான் எழில்பட நடம்செயும் திறத்தவன்
எழுந்ததீயும் சந்திரன் எரிந்திருக்கும் சூரியன்
தனைவிழி களாய்த்தரித் துமேஅழித் திடும்சிவன்
4
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
கரத்தணிந்த கங்கணம் ஒலிக்குமந்த கிண்கிணி
சிறப்புறப் பதிந்துமே ஒளிர்ந்திடும் எழில்மணி
நிறைந்தெழில் சிதம்பரன் இடும்-நடம் தனக்குமே
நான்முகன் முகுந்தனும் திமித்தக தகத்திமி
எனப்பறை முழங்கிட சிறந்தமால் உடன்வரும்
பெரும்ரதம் தனைக்கரு டனும்இழுத் துவந்திட
சிறந்தகந் தனும்மயில் தனில்அழ குடன்வர
திரண்டநல் கணங்களும் ரிதிப்பிருங்கி ஸ்ருங்கியும்
கூடநந்தி வந்திடச் சனகரும் சனந்தரும்
மற்றமுனி புங்கவர் களும்வரச் சிரம்பட
சென்றுமே பணிந்திட அருள்புரிந்த தேஅவன்
நின்றுமே களித்திட நடம்புரிந்த தேசிவன்
5
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
ஆதியந்த மற்றஜோதி மலைமகள் இவனில்பாதி
தீதிலாத தேவர்மற்ற கடவுளரும் பணிவர்ஓதி
சூதிலாத முனிவர்நெஞ்சில் உறையும்மாசி லாதஜோதி
நீரும்வானும் நிலவும்மண்ணும் வீசுகின்ற காற்றிலேதீ
சீரின்ஆன்மம் சூரியனும் கொண்டமேனிக் கூற்றிலே நீ
எல்லையற்ற செல்வம்கொண்ட மூவுலகின் தலையுமேநீ
முக்கண்மூர்த்தி யாகிமூன்று புரம்எரித்த ஜோதியேநீ
இடர்களைத யாபரன்நீ சனந்தரின் சதாசிவம் நீ
6
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
மனத்தினால் நினைத்துமே அறிந்திடப் படாததேன்
விடத்தினால் கருத்துமே விளங்குகண்ட மானதே
மலர்ப்படப் பறந்திடும் சிறந்தவண்டு போன்றதே
உடலின்தூய வெண்ணிறம் மலர்ந்துதோன்றும் குந்தலம்
படரும் பக்திதன்னுடன் மாலும்தேவர் கோனுமே
சுடலைநாதன் தன்னையே வணங்குகின்ற போதிலே
சுடரின்சோதி யாகவே ஒளிருகின்ற தானவன்
செவியிலாடும் குண்டலம் புவியிலோடும் சர்ப்பமே
பயப்படாத மனத்தினன் அசைந்திடாத ஒருத்தனே
புலன்வயப் படும்மதன் துணைரதி வணங்கிட
மனம்தனில் எழும்அருள் தனில்வரம் வழங்கினான்
நன்மனம் உளோர்தொழும் சிவன்இவன் சிறந்தவன்
துன்மதி கஜாசுரன் தனைவதம் புரிந்தவன்
நன்மதி அருச்சுனன் பணிந்திடும் சிவன்இவன்
பணிந்திடும் உயிர்களின் மனம்மகிழ் இறைஇவன்
7
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
தெய்வம் யாவில் சிறந்தவன் புரங்கள் தீயில் எரித்தவன்
தடங்கல் -நீக்க கணபதி தனைப்படைத்த நல்-மனன்
தேவர்படை நடத்திடவே அறுமுகனைப் படைத்தவன்
அருள்தரும் இவன்சடை சிவந்தபொன்னு மானவன்
மலர்களும் மலர்ந்திட ஒளிருகின்ற சூரியன்
உயிர்களும் மகிழ்ந்திட குளிருகின்ற பனியவன்
மயங்கிடும் விதம்மனம் உமையிலும் இலாதவன்
கடல்எழும் விடம்தனை குடித்துவையம் காத்தவன்
கடல்எனும் விதம்பல சிறந்தநல் குணத்தவன்
சனந்தரும் மகிழ்ந்திடும் வரம்தரும் சிவன்இவன்
பிறைமதி தனில்எழில் முகம்தனில் ஒளிர்பவன்
நிறைந்திடும் மனம்தனில் சுத்தசத்வ மானவன்
8
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
உழன்றிடும் விதம்தனில் பிறப்பிலா சிறப்பவன்
சுழன்றிடும் உலகைத்தன் ரதம்எனப் பறந்தவன்
பொன்னின்சிகரம் மேருவை வில்லுமாய் எடுத்தவன்
பாம்பில்சிறந்த வாசுகி அம்புமாய்த் தொடுத்தவன்
கரம்தனில் மானுடன் மழுவும்வாளும் கொண்டவன்
ஒலித்திடச் சிவந்தநல் லுடுக்கைகொண் டிருப்பவன்
ஒளிர்ந்திடும் முகுந்தனை அம்புமாகக் கொண்டவன்
பணிந்திருக்கு மானபத்தர் தனக்கருள் புரிந்தவன்
கனிந்துமோது வேதம்தன்னை மனம்தனில் தரித்தவன்
சண்டியோ டிணைந்துமுப் புரம்எரித்த தேவனாம்
9
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
பிறப்பறுத் தவன்மதன் தனைஎரித் தவன்சிவன்
சிறப்புறப் புவி தனைக் காத்துநிற்கு மிறையிவன்
சுரந்துநிற்கும் கருணையால் அருள்புரிந்த அன்னையாம்
இறந்துவீழ அந்தகன் தனைஅழித்த வீரனாம்
எறிந்தெழும்பும் தீயினைப் பிடித்திருக்கும் ஒருவனாம்
சிறந்திருக்கு மிந்த்ரனும் பணியும்நல்ல தேவனாம்
ஒளிர்ந்துநிற்கும் சூரியன் நூறின்நூறு மானவன்
விரைந்தெழும்பும் நல்மணம் கமழுகின்ற மேனியன்
பதம்தனில் பதஞ்சலி பணிந்துமேத்து மோர்சிவன்
துதித்தநெஞ்சக் கூட்டினில் கிளியுமான பிரணவமாம்
10
சிதம்பரம் தனில்-நடம் புரிந்திடும் சிவன்தனை
நினைத்துமே பணிந்திடு மனத்தினில் மகிழ்ந்திடு
சிறந்தபாம் பனந்தனே மண்தனில் பதஞ்சலி
புனைந்தவிந்த தோத்திரம் தரும்சிறந்த தோரிடம்
மனம்படிந்து ஓதிட விளங்குமந்த பாதமும்
முதல்முடி(வ்) விலாததாய் கடல்அலைப் போலாதலால்
நுதல்தனில் எழும்சுடர் தரும்சிவன் பதம்தரும்
படைத்தநான் முகன்தனும் கிடந்தகோல மாலனும்
போற்றுகின்ற தேவனைத் துதித்திடும் விதம்இரும்
இதைப்படிப் பவர்சிதம் தனில்சிவம் தெரிந்திடும்
வதைத்திடும் பிறப்பிறப் பினைக்களைந் தெறிந்திடும்
பதஞ்சலி துதித்திடும் வரம்தரும் சதாசிவம்
தினம்மனம் நினைத்திடும் சிதம்தனில் வரும்சிவம்
___________________
No comments:
Post a Comment