Saturday, January 21, 2012

ஹனுமான் சாலீசா




குருவின்பாத தூளிஇட்டு மனதின்மாசு போக்குவேன்
ரகுவின்வம்சத் திலகராமன் தருமப்பொருளும் விழையுமருளும்
கிடைக்கவரிய முக்திதன்னை பக்தர்க்கருளும் கருணைராமன்
மானிடனாய் அவதரித்து மண்ணில்வந்த எந்தன்ராமன்
அவனின்புகழ் பாடுவேன் பரமன்பதம் நாடுவேன்
இறையெனவே மண்ணில்வந்த ராமன்புகழ் கூறுவேன்

அறிவில்குறைப் பிறவிமனித உருவில்உறை ஒருவன்நான்
சிறைப்பினிறை வாயுமைந்த விரைந்தருளும் அனுமனே
தயைபுரிவாய் அளித்திடுவாய் துன்பம்தோஷம் பேதைமை
தனைக்களையும் சிறந்தவந்த சக்திஞான உணர்வினை


1
உலகமூன்றில் நிறையுமாறு திகழுமுந்தன் புகழொளி
துலங்குமறிவு நிறைந்தஞானம் விளங்குவெற்றி அனுமனே


2
உலகிற்சிறந்த வாயுமைந்தன் ராமதூதன் நீயடா
அளவிரந்த பலமும்கொண்ட அஞ்சனையின் மைந்தனே


3
திடத்தில்விளை துணிவுமிக்க தீமைதரும் எண்ணம்களை
எடுத்துமொளி ஞானியரை நட்புகொண்டு அருள்வனே


4-5
பொன்னின்மேனி அழகுற விள ங்குமா பரணமும்
செவியில்விளங்கு குண்டலம் எழிலில்சுருண்ட கேசமும்
சிறந்தஇந்த்ர கதையும்கையில் பறந்தவெற்றிக் கொடியும்புனிதப்
புரிந்தநூலின் களையும்சிறந்த நகையுமாக மிளிருதே


புரிந்த நூல் = புரி நூல் (பூணூல்)


6
சிவனின்அம்சத் தோன்றலே கேசரியின் மைந்தனே
புவனம்தன்னில் சக்தியால் ஒளிபரப்பும் விந்தனே


7
அறிவிற்சிறந்த ஞானவான் சிறந்ததொரு புத்திமான்
இறைவன்ராமன் சேவைதன்னில் உனக்குமிகுந்த ஆர்வமாம்


8
ராமன்கதையை சொல்லிடவே கூர்ந்துமதனைக் கேட்பவன்
மனத்தினிலே ராமசீதை இலக்குவனைக் கொண்டவன்


9
சிறுத்தஉடலில் சீதைதன்னை விரைந்துகண்டு கொண்டவன்
பெருத்தஉடலில் இலங்கைதன்னை தீயில்கொளுத்திச் சென்றவன்


10
பாரதத்தில் பீமனான வாயுதன்னின் அம்சமே
இலங்கைதன்னில் அசுரர்தன்னை செய்ததுநீ த்வம்சமே


11
இலக்குவனும் விழித்துமெழ மூலிகைசஞ் சீவிநீ
எடுத்துவர மகிழ்ந்தராமன் அணைத்தசிரஞ் சீவிநீ


12-13
பக்திதன்னில் மகிழ்ந்தராமன் புகழ்ந்துசொன்ன தோர்உரை
மனதிலன்பு மிகவும்கொண்ட பரதனுக்கு நீஇணை
என்றுமனம் மகிழ்ந்துராமன் திரும்பிச் சொல்லி யேஉனை
நன்றுதன்னில் சேர்த்தணைத்து புகழ்ச்சிசெய்த துன்நிறை


14-15
சனகாதி முனிவருடன் பிரமதேவன் தானுமே
மனதின்வேகம் கொண்டுமூன்று உலகம்சுற்றும் நாரதர்
நினைத்துயாரும் கல்விவேண்டும் கலைகள்தன்னின் வாணியும்
அணையுமாகப் பரமனுக்கு விளங்கும் ஆதிசேஷனும்
வினைமுடிய உயிர்எடுக்கும் யமனும்செல்வக் குபேரனும்
துணையெனவே எட்டுத்திக்கும் காத்துநிற்கும் பாலரும்
உனைநினைந்துன் புகழ்தனையே பாடிப்போற்ற லாகுவர்
தினையெனவே அறிவுடனே கவிகள்எழுத்தில் வடித்திட
நினைத்திடவே இயன்றிடாது எழுதுவது எங்கனம் ?


16-17
சிறந்ததொரு உதவியென குரங்கர சுக்ரீவனை
பரந்தமன ராமனுடன் நட்புறநீ செய்ததால்
பகைஎனவே கனவினிலும் பயமுறுத்தும் வாலிவீழ
விரைந்துமவன் அரசுரிமை அடைந்துநலம் பெற்றனன்
இலங்கைமன்ன னாகவீட ணனுமரசுக் கட்டிலில்
விளங்குமாறு செய்ததுந்தன் மனம்கனிந்த அறிவுரை


18
ஆயிரம் கரங்கள்நீட்டி அணைக்கின்ற தாயாய்விண்ணின்
சூரியன்தன்னைக் கனிந்து சிவந்ததோர்கனியாய் எண்ணி
தாவியே பிடித்துமதனை விழுங்கிட எண்ணினாயே 19
சேயுமாய் எண்ணிஉன்னை சூரியன் களிகொண்டானே


வாயினில் ராமன்தந்த மோதிரம் தன்னைக்கவ்வி
தாவியே சமுத்திரத்தைக் கடந்துமே காட்டினாயே
பூமியே கண்டிராத பெரியதோர் அற்புதத்தை
தாவியே செய்திட்டாயே காவியம் படைத்தாய்நீயே


20
தன்னல மிலாதசேவை செய்துநீயும் காட்டினாய்
பிறர்நலம் கருதிவாழும் சான்றோர்வாழ்வு தன்னையே
ராமன்வழி நடத்துவான் பொறுப்புமேற்றுக் கொள்ளுவான்
என்பதற்குச் சான்றுமாக இருந்த தெய்வப் புருஷன்நீ

21
ராமன்வாழும் வைகுண்டம் தன்னிலிருக்கும் காவல்நீ
தேவன்உந்தன் அருளிளிருக்க ராமனருளும் கிட்டுமே


22
உந்தன்கருணை தன்னிலே வந்துநிற்கும் இன்பமே
எந்தநாளும் மனதிலே இல்லைஎந்த பயமுமே


23
ஒளிநிறைந்த முகத்தினாய் ஒலிகொடுக்கும் கர்ஜனை
இடியெனவே ஒலித்திடும் அதிரும்மூன்று உலகமும்


24-26
பேயும்தீய சக்தியும் பாயில்சாய்க்கும் நோயுமே
காயுமெந்த துன்பமும் ஓயுமுந்தன் அருளினால்
வாய்தனிலே உன்பெயர் சொல்லிடவே ஓடிடும்
நெருக்கடியும் மறையுமுன்னை மனதில்த்யானம் செய்திட


27-28
ராமத்யானம் செய்பவர் அவனின்நாமம் உரைப்பவர்
யாரெனினும் அவர்களை அருள்புரிந்து காப்பவன்
உந்தன்பக்தர் வேண்டும்வரம் அளித்துக்காக்கும் சக்திநீ
எந்தநாளும் சிரத்தில்கொள்ள தலைசிறந்த புத்திநீ


29
யுகம்கடந்து நின்றிடும் காலம்தன்னை வென்றிடும்
நிதம்நினைக்க லானஉந்தன் புகழ்நிலைத்து நின்றிடும்
பதம்தனைக் கடந்துமது அண்டம்தாண்டி சென்றிடும்
சிதம்தனில் ராமநாமம் உன்னைத்துணை யாக்கிடும்


30
முனிவர்கள் ஞானியர் காத்திடும் தேவனே
ராமனின் மனம்கவர் தனிப்பெரும் தேவதை
அசுரர்கள் தனைவதம் செய்தநல் சூரனே
சிறப்பினில் இருந்திட பிறந்திட்ட வீரனே


31
எட்டுசித்தி தன்னுடன் ஒன்பதான நிதிகளைக்
கிட்டுமாறு வரமென அருளுகின்ற சக்தியை
சீதையிடம் பெற்றவன் சக்திமிகவும் உற்றவன்
கோதிலாத பக்திதன்னில் ஈடுமிணையு மற்றவன்


32
சத்தியத்தில் ராமபக்தி ரசமுமாக இருப்பவன்
நித்தியத்தில் ராமசேவை தன்னில்நிலைத்து மிருப்பவன்


33
உந்தன்நாமம் சொல்லவே கிடைக்கும்ராமன் அருளுமே
பந்தம்யாவும் விலகுமே பிறவித்தளையும் நீங்குமே

34
உயிர்பிரியும் கணத்திலே ராமநாமம் உதட்டிலே
உச்சரித்த ஜீவனை முக்திசேர்க்கும் அண்ணலே


35-37
வேறுதெய்வம் ஏனடா அனுமன்ஒருவ னேயடா
சிறப்புறவே அருளுகின்ற தெய்வத்தாயு மேயடா
கசிந்துநீயும் சொல்லடா அவனின் நாமமேயடா
விரைந்துமது வழங்கிவிடும் முக்தியுமே தானடா


38-39
ஜெய் அனுமனென்று கூறடா அவனிடத்தில் கேளடா
உய்யுகின்ற வரமருளும் குருவுமாகக் கோரடா
நெய்யுமாக உருகிஇதை நூறுமுறை கூறடா
பெய்யுமருள் ஆனந்தத்தின் மழைதனிலே நனையடா


40-41
கணமும் மனதில் அனுமன் புகழ்
கூறு மிந்த ஸ்லோகம் தனை
நினைக்கும் நெஞ்சம் மேன்மை பெறும்
சடையில் கங்கை அணிந்த சிறந்த
விடையில் ஏறும் சிவனு மதற்கு
சாட்சியுமே தானடா மாட்சிமைநீ உணரடா


துளசி தாசன் இறையின் தாசன்
இளகி மனதில் வேண்டும் ஆசை
துலங்கு மாறு எந்தன் நெஞ்சில்
இலங்கி நீயும் உறைய வேண்டும்


வெற்றி வெற்றி ராம தூதன்
போற்றி போற்றி அனுமன் பாதம்..!


______________

Instrumental








































============================

No comments:

Post a Comment