நீண்டபோர் தனில்உடல் சோர்வடைந்து மேமனம்
கொண்டதோர் அழற்சியில் ஆழ்ந்தசிந் தனைதனில்
*கண்டிடாதக் கண்ணனாய் *விண்டிடாத எண்ணனாய்
*தண்டுவிட்டு மேதரை தனில்அமர்ந்த ராமனை
கண்டுநின்ற குறுமுனி நன்கறிந்த மகரிஷி
விண்டுசொல்லி டாதிருக்கு மந்தகடும் சமர்தனை
கண்டிடவே தேவருடன் சேர்ந்திருக்க வந்தவர்
பண்டுதொட்டு வந்ததமிழ் யோகியரில் சிறந்தவர்
*கண்டிடாக் கண்ணனாய் = சுற்றி நடப்பதைக் காணாமல்
*விண்டிடாத எண்ணனாய் = புரிபடாத எண்ணங்களை உடைத்தவனாய்
*தண்டு= ஆயுதம்
மனதில்கருணை ஊற்றெடுக்க ஆறுமொழி கூறினார்
கணத்திலெதுவும் கற்றொழுகும் ராமனையே தேற்றினார்
சிறந்தவில்லின் வீரனே பலத்தில்மிகுந்த ராமனே
விரைந்துநீயும் கேட்டிடு அறியுமாறு கூறுவேன்
அழித்துப்போரில் பகை முடிக்க சிறந்ததொருரகசியம்
அறியுமாறு வானில்தெரியும் சூரியன்மேல் ஓர்இயம்
புரிந்திடவே இதனைத்யானம் மனதினிலே அனுதினம்
புரியுமெந்த செயலிலுமே பலனும்நன்கு கிடைத்திடும்
புரியும்போரில் பகையழித்து வெற்றிகொண்டு சேர்த்திடும்
துரியநிலையில் கிடைக்குமந்த ஆனந்தமும் அளித்திடும்
*ஆறுமொழி = ஆறுதல்
*இயம் = இயற்றப்பட்ட மந்திரம்
6-7
கதிர்தனில் ஒளிர்ந்திடும் உதயமான சூரியன்
மனம்தனில் தேவரசுரர் வணங்குகின்ற ஆதவன்
தினம்எழும் இவன்கதிர் தனில்ஒளிர்ந் திடும்புலம்
அண்டமாளும் அரசிவனை தொழுதிடுநீ ராமனே
வானுலகம் தன்னில்தோன்றி வாழுகின்ற யாவையும்
தானெனவே தோன்றலாக இருக்குமந்த சூரியன்
தானொளிரும் தன்மையனாய் யாவும்காக்கும் ஓரியன்
சக்திதந்து உணவளித்து உலகம்யாவும் காப்பவன்
புத்திதன்னில் தோற்றுவிக்கும் தேவர்மற்றும் அசுரர்க்கும்
சக்தியுமே தந்தருளும் பொருளுமாக இருப்பவன்
*ஓரியன் = ஓர் இயல்புடையவன்
*புத்திதன்னில் தோற்றுவிக்கும் தேவர் = படைக்கும் ஆற்றல் கொண்ட உபதெய்வங்கள்
8-9
பிரமன்விஷ்ணு சிவனுமாக கந்தனுமாய்ப்ர ஜாபதி
என்னுமா ரருத்தலன்றி வேறுவேறு தோற்றமாய்
ஆனமற்ற தேவராம கேந்திரன் குபேரகாலன்
யமனுமாகி சோமனாகத் தோன்றி வருணனாகியே
அருளிச்செய்யும் பித்துரு எட்டிலுள்ள வசுக்களும்
உருவகிக்கும் பன்னிரு சாத்தியர்க ளுடனுமே
இருவரான அஸ்வினி குமாரருடன் மருதரின்
பெரியகூட்டம் தனக்குமே தலைவனாகத் திகழ்பவன்
அதுவுமட்டு மன்றியே வைவஸ்வத மனுவுடன்
வாயுமற்றும் அக்கினி இவர்க்கும் தலைவனானவன்
இவர்கள்செயலு மானவன் இயக்குகின்ற ஒருவனாம்
உலகிர்க்குயிர் கொடுப்பவன் பருவம்நான்கைப் நடத்துவான்
விளங்கிநிற்குமாறு புகழும் பேரையுமே கொடுப்பவன்
10-11
அதிதியின் குமாரனாம் அகிலவுலகில் ஒருவனாம்
விரைந்துசெயல்கள் புரிந்திடவே உதவுகின்ற சக்தியாம்
சுவர்க்கம்கடந்து ஒளிர்பவன் எங்கும்நிறையும் பொன்னிற
கதிர்கள்கொண்டு விளங்குவான் உலகைத்தாங்கும் தம்பிரான்
உயிர்கள்யாவும் விழித்திடவே பகலதனைப் படைப்பவன்
உலகமெங்கும் கதிர்கள்கொண்டு நீக்கமற நிறைபவன்
புலன்களியங்க சக்திதன்னை அளிக்குமந்த சக்தியாம்
இருளைநீக்கும் ஒளியவன் இன்பம்செழுமை தருபவன்
அதிட்டம்தன்னைத் அருள்பவன் எதிலுமுள்ள உயிரவன்
12
தெய்வம்மூன்று மானவன் விளங்குகின்ற நாளவன்
வணங்கும் குருவுமானவன் கர்ப்பம்கொண்ட நெருப்பவன்
அதிதிமகனு மானவன் ஆனந்தத்தின் வடிவினன்
எதிலும்உள்ள தீமைதன்னை விதையுமர நீக்குவான்
13
பிரபஞ்சம்படைத்துக் காத்துமறி யாமைஇருளை அகற்றுவான்
ரிக்குசாம யஜுரெனுமூ வேதங்களின் தலைவனாம்
நீரின்நண்பன் தானிவன் மழைபொழியக் காரணன்
பரந்தவிந்த்ய மலைகள்தனைத் துரிதமாகக் கடப்பவன்
14
அக்கினித்தீ மூட்டமாம் வானில்மஞ்சள் வட்டமாம்
அழிக்குமூழி முதல்வனாம் பழியும்தடையும் களைபவன்
ஒருக்கும்சாவின் கடவுளாம் படைக்கும்உண்மைப் பொருளுமாம்
சிறந்துவிளங்கு மொளியிலெங்கும் சிவந்துபரந்து நிறையுமாம்
சிறந்துவிளங்கு மொளியிலெங்கும் சிவந்துபரந்து நிறையுமாம்
15
விண்ணின்மீன்கள் கூட்டமும் வானில்திகழும் கிரகமும்
எண்ணர்க்கரிய அண்டமும் படைத்துமாளும் அரசனாம்
அற்புதத்தி லற்புத மாகவானில் ஜொலிப்பவன்
சிறந்தகால பன்னிரு மாதமாகச் சிறப்பவன்
என்றுமிருக்கும் நிரந்தரன் யாவும்காக்கும் புரந்தரன்
நின்றுநாங்கள் போற்றுவோம் வென்றிடுமுன் பாதமே
16
போற்றிபோற்றி போற்றியே கிழக்குமேற்கு திசைகளில்
வீற்றிருக்கும் மலைகளை ஆளுகின்ற அரசனே
போற்றிபோற்றி போற்றிவிண் மீன்கள்தன்னின் அரசனே
போற்றிபோற்றி போற்றிகோளும் நாளுமாளும் அரசனே
17
வெற்றிநல்கும் மாட்சிபோற்றி வெற்றிநல்கும் மகிழ்ச்சிபோற்றி
பெற்றிருக்கும் தேரில்மஞ்சள் குதிரைகொண்ட எழுச்சிபோற்றி
ஆயிரமாய் ஜொலித்திருக்கும் கதிர்கள்கொண்ட ஒளியேபோற்றி
தாயுமான அதிதிபெற்ற மேன்மைகொண்ட தனயபோற்றி
18
புலன் ஒடுக்கும் வீரன் போற்றி
வேகம் கொண்ட சூரன் போற்றி
புலர்ந்து வந்து மலர்கள் தன்னை
மலர வைக்கும் சக்தி போற்றி
தீமைக் குமே கடுமை போற்றி
நீக்க மற்ற நிறைவே போற்றி
19
பிரமன் சிவன் விஷ்ணு போற்றி
சக்தி தரும் ஜிஷ்ணு போற்றி
ஒளி கொடுக்கும் விளக்கு போற்றி
அழித்துப் போக்கும் தொழிலில் ருத்ரன்
வடிவைப் போன்ற தோற்றம் போற்றி
20
இருளைப் நீக்கும் ஒளியே போற்றி
குளிரைப் போக்கும் தீயே போற்றி
பகை களையும் வெற்றி போற்றி
அளவி ரந்த பொருளே போற்றி
நன்றி கொன்றோர் கொல்வோய் போற்றி
விண்ணின் மீன்கள் இயக்கம் போற்றி
ஜிஷ்ணு=Victorious
21
தங்கமங்க மாகியறி யாமைபோக்கும் அறிவுபோற்றி
தங்கும்வண்ண மாகிநிற்கும் அண்டம்செய்த அண்ணல்போற்றி
இருளைப்போக்கும் ஒளியேபோற்றி மின்னுகின்ற காந்திபோற்றி
உலகமெங்கும் நிறைந்திருந்து சாட்சியாகும் காட்சிபோற்றி
காந்தி=Radiance
22
எதையும் அழித்து முடிப்பாய் போற்றி
யாவும் பின்னர் படைப்பாய் போற்றி
நீரில் ஆவி ஆனாய் போற்றி
மேகம் தன்னில் மழைநீ போற்றி
23
உடலில் உள்ள உயிரும் போற்றி
உயிரைச் செலுத்தும் ஆன்மம் போற்றி
உறங்கும் போது விழிப்பு போற்றி
சிறக்கும் யாகத் தீயே போற்றி
யாகம் கொண்ட பலனே போற்றி
24
ஆதவனே நான்மறை நால்திசையு மேநிறை
அண்டம்தனைத் தோற்றியதை ஆளுகின்ற ஓர்நிறை
யாவுமாகும் தோன்றலே இயக்குமந்த ஆற்றலே
யாகமாகி யாகம்தன்னில் கொள்ளுகின்ற பலனுமே
25
மனம்மகிழ்ந் திடும்எழில் உடைமதன் தனும்தலை
குனிந்திடும் விதம்தனில் எழில்படைத் தராகவா
மனம்அதில் வரும்துயர் கணம்தோறும் படும்இடர்
பகைவரா லபாயமும் கணம்தனில் மறைந்திடும்
தொலைந்துமே அழிந்திடும் இதைக்கசிந்து மோதிட
களைபெரும் மந்நெஞ்சமே இன்பமங்கு துஞ்சுமே
26
சிறந்தவோர் முனைப்பினை ராகவாநீ கொண்டிடு
சிறந்ததெய்வம் ஆதவன் தனைமனம் நினைத்திடு
மறைபொருள் எனும்இதை மும்முறை ஜபித்திடு
விரைந்திடும் ஜெயக்களை முகத்தினில் தரித்திடு
27-30
சிறந்தவில்லின் ராமனே இறந்திடுவான் ராவணன்
துறந்துசோர்வு புறப்படு விரைந்துநீயும் செயல்படு
சிறுத்தமுனி சொல்லினன் பிறகுசென்று மறைந்தனன்
பறந்துகவலை போனது பஞ்சாய்மனது ஆனது
நிறைந்தமனதில் ராமனும் பூரிப்பினை எய்தினன்
தைரியத்தை அடைந்துமே புத்துணர்ச்சி கொண்டனன்
எரித்திருக்கும் சூரியன் தன்னைக்கண்டு குளிர்ந்தனன்
புரிந்திருக்கும் பூசையாய் மூன்றுமுறை ஜபித்தனன்
அரித்திருக்கும் கவலைநீங்கி ஆனந்தமே கொண்டனன்
31
எதிரில்வந்த ராவணனைக் கண்டுஉவகை எய்தினன்
சமர்புரிந்து பகைமுடிக்க மனதில்உறுதி பூண்டனன்
இருளில்திரியும் ராவணனும் வெருண்டுமோடி வந்தனன்
இருள்விரட்டும் சூரியனும் இதனைநன்கு கண்டனன்
மருளைப்போக்கும் ராமனையே மனம்மகிழக் அழைத்தனன்
துரிதம்..துரிதம்.. ராகவனே துரிதம்என்று கூவினன்
துரிதம்..துரிதம்.. ராகவனே துரிதம்என்று கூவினன்
அரிதுஅரிது இறையின்காட்சி அறிதுமென்று அறிந்தவன்
கொடிதுகொடிது பிறவிகொடிது என்றுபயந்து விரைந்தவன்
இனிதுஇனிது ராமனம்பு என்றுமினிது நன்றென
மனதில்கொண்ட ராவணனும் பிறவிப்பயனை அடைந்தனன் ..!
__________
Learning aid
சூர்ய நமஸ்காரம்
No comments:
Post a Comment