Saturday, March 3, 2012

ருத்ரம் (நாமகம்)


ஓம் நமோ பகவதே ருத்ராய



அனுவாகம் – 1

செய்யும் பாவம் கொய்யும் இறைவ
துன்பம் தன்னைக் களையும் தலைவா
உய்யும் வண்ணம் செய்யும் முதல்வா
உந்தன் பாதம் பணிந்தோம் ருத்ரா


வணங்கினோமே உன்னையே பாவம்களையும் ருத்ரனே
மனம்கனிந் தருள்புரி துன்பம்களையும் துணைவனே
உந்தன்கோபம் தணியவும் உந்தன்வேகம் குறையவும்
வில்லும்கரமும் வணங்கினோம் உன்னையுமே வணங்கினோம்

துன்பழிக்கும் ருத்ரனே காத்தருள்வாய் மித்ரனே
அம்பும்வில்லும் கொண்டுநீ நடுக்கம்நீக்கு சித்தனே
அமைதிநின்ற உருவம்கொண்டு புரிந்தஎங்கள் பாவம்கொன்று
நிறைந்தவா னந்தம்கொண்டு இருந்தாய்அந்த கயிலைசென்று
குறைந்திடாமல் வளர்ந்துநின்று அறியும்வண்ணம் ஞானம்பெற்று
கரைந்துநின்னை உணரும்நெஞ்சு அளித்திடுவாய் ருத்ரஇன்று

மலைதனில் உறைஇறை விரைபொருள் அருள்நிறை
கரம்விளங்கு மம்பினை புறப்படாமல் செய்திடு
விரைந்துசென்று உலகினை அழித்திடாத விதத்தினில்
அமைதிகொண்டு அமைந்திடும் வண்ணமாய்நீ அருளிடு

உலகில்உறையும் மாந்தரும் உறைகின்றகால் நடைகளும்
ஓங்கிடவே செய்துநோய் வாய்ப்படாமல் அருள்புரி
தங்கிடாமல் நெஞ்சிலே மாசுநீக்கி மருள்களை
மங்கலமாய்ப் போற்றுவோம் சிறந்தகயிலை நாதனே

என்பொருட்டு வந்துமே என்தரப்பில் உரைத்திட
விண்ணுலக தேவரும் பணித்துபுகழ் பாடிடும்
என்மனத்தின் நோய்களைப் போக்குகின்ற ருத்திரன்
தன்னைப்பணிந்து வேண்டுவேன் அன்னையாகக் கோருவேன்

துன்பம்தரும் தேளும்பாம்பும் புலிகள்போன்ற மிருகமும்
கண்ணில்படா மாயம்செய்யும் பேய்ப்பிசாசு பூதமும்
மண்ணில்மாந்தர் நிலையழித்து குணம்கெடுக்கும் அசுரரும்
எண்ணிலாமல் வந்திடினும் அழித்திடுவான் ருத்ரனே

சிவந்துமே உதிப்பவன் உதித்தபின் பொன்னவன்
மிகுந்தமங்க லம்தரும் சிறந்திருக்கும் சூரியன்
தானுமாவான் ருத்திரன் யாவுமிங்கு அவன்திறன்
மற்றிருக்கும் யாவரும் இவனுக்குமே சமனிலை

சிவந்திருக்கும் நீலகண்டன் யாரும்காணத் தோன்றுகின்ற
ருத்ரன்நம்மைக் காப்பதாக மனதில்மகிழ்ச்சி தருவதாக
நீலகண்டன் அருளிடவே அவனைப்புகழ்ந்து போற்றுவேன்
ஆயிரத்தின் கண்ணுடையோன் அடியவரை வணங்குவேன்

வில்லில்நாணை அவிழ்த்திடு அம்புகளைக் கைவிடு
நூறின்நூறு கண்ணனே பாரில்சிறந்த ருத்ரனே
கூறின்ஈட்டி தன்னையே கூரிடாமல் செய்திடு
நிறையும்சத்வ சிவனுமாய் வடிவம்நீயும் எடுத்திடு
குறையும்கொண்ட எங்களையே காத்தருள்நீ புரிந்திடு

ருத்திரனின் வில்லில்நாணும் இல்லாமலே செய்திடு
அம்புறாவின் தோணியிலே அம்பிலாமல் செய்திடு
அம்புகளும் துளைக்கும்திறனை இழக்குமாறு செய்திடு
உறையிலிருந்து வாளைவெளியில் உருவிடாமல் வைத்திரு

சிறந்தஇறைவ ருத்திர கருணைசெய் தயாபர
இரக்கம்கொண்டு எங்களை காத்தருள்வாய் சங்கரா
உலகமாயை களைந்திடு ஆயுதத்தால் போக்கிடு
கரத்திலுள்ள வில்லும்அம்பும் அழித்திடாமல் காத்திடு

பலத்தின் ஆயு தங்கள் போற்றி
விளங்கும் வில்லும் அம்பும் போற்றி
அவற்றைக் கொண்டு காப்பாய் போற்றி
அவற்றை ஒதுக்கி வைப்பாய் போற்றி

போற்றி அகில நாதன் போற்றி
போற்றி முக்கண் முதல்வ போற்றி

புரம் எரித்த ருத்ர போற்றி
காலத்தீ தணித்தோய் போற்றி


காலன் துன்பம் துடைப்போய் போற்றி
நீலம் கொண்ட கண்டன் போற்றி

சுத்த சத்வ சிவனே போற்றி
தேவ மகா தேவன் போற்றி



அனுவாகம் – 2

பொன்கரத்தின் ருத்ரன் போற்றி
பகைமுடிக்கும் வீரன் போற்றி
திசைகள் எட்டின் தலைவ போற்றி
பச்சைஇலை மரங்கள் போற்றி

கால்நடைகள் காப்போய் போற்றி
மஞ்சள்வண்ணம் சிவந்து ஒளிரும்
பொன்னின்மேனி வண்ண போற்றி
விடையில்ஏறி அருள்வோய் போற்றி
தடையறவே துளைப்போய் போற்றி
உணவளிக்கும் அன்னை போற்றி

சுருண்டகரும் சடையன் போற்றி
திரண்டபுரி நூலோன் போற்றி
நிறைந்தநலம் அருள்வோய் போற்றி
அண்டம்ஆண்ட மன்னன் போற்றி
அண்டம்தன்னைக் காப்போய் போற்றி

வில்லெடுத்துக் காப்போய் போற்றி
துன்பம்போக்கும் ருத்ரன் போற்றி
விளைநிலத்தின் தலைவ போற்றி
புண்யஷேத்ர இறைவ போற்றி

தர்மத்தின்சா ரதியே போற்றி
அழிந்திடாத ஒருவன் போற்றி
காடுகளின் தலைவ போற்றி
சிவந்திருக்கும் சிவனே போற்றி
வளர்ந்தமரத்தின் தலைவ போற்றி

அறிவுடையோர் அரசன் போற்றி
அறிவுரைக்கும் விரையே போற்றி

வைசியரின் தலைவ போற்றி
அடர்ந்ததோப்பின் அரசன் போற்றி

உலகம்தன்னின் அரசே போற்றி
உளத்தில்தோன்றும் பக்தி போற்றி

படைநடத்தும் வீரன் போற்றி
இடிமுழக்கம் கொண்டு தீய
பகைமுடிக்கும் சூரன் போற்றி

சூழ்ந்து பகை அழிப்பாய் போற்றி
ஆழ்ந்து நினைக்கும் முனிவர்களைக்

காத்துநிற்கும் இறைவ போற்றி
எங்கும்நிறை பரமன் போற்றி
உதவவிரையும் இறைவன் போற்றி



அனுவாகம் – 3

பகை எதிர்க்கும் வீரம் போற்றி
எளிதில் முடிக்கும் வேகம் போற்றி
துளைத்தெடுக்கும் கூர்மை போற்றி
புரம் எரிக்கும் உக்ரம் போற்றி
சிறந்தநல் தோற்றம் போற்றி
சிறந்தவாள் வீரன் போற்றி
மனம்கவர் கள்வன் போற்றி
கள்வரின் தலைவன் போற்றி

வில்லொடு அம்பி னோடும்
விளங்குநல் வீரன் போற்றி
கொள்ளையில் மனம் கவர்
கொள்ளையர் தலைவன் போற்றி

அடர்ந்திடும் காட்டில் திரியும்
தாக்கிடத் துடித்து நிற்கும்
திருடர்கள் தலைவ போற்றி

படைகொண்ட கொள்ளைக் காரர்
அவர்கொண்ட தலைவன் போற்றி

தலைப்பாகை யுடனே மலையில்
அலைந்திடும் ருத்ரன் போற்றி

உலகில்உள்ள நிலத்தை ஆளும்
திலகமான தலைவன் போற்றி

ஈட்டிஅம்பு கரத்தோன் போற்றி
அம்புஎய்யும் திறத்தோன் போற்றி
நாண்வளைக்கும் திறமை போற்றி
இலக்கில்அம்பு எரிவோய் போற்றி

சாய்ந்தமர்ந்த *ருத்ரர் போற்றி
விழித்திருக்கும் ருத்ரர் போற்றி
உறங்குகின்ற ருத்ரர் போற்றி
நிற்கும் ருத்ரர் போற்றி போற்றி
ஓடும் ருத்ரர் போற்றி போற்றி

சபையில் அங்கம் ருத்ரர் போற்றி
சபையை ஆளும் ருத்ரர் போற்றி

குதிரையான ருத்ரர் போற்றி
சாரதியாம் ருத்ரர் போற்றி
**ருத்ரர் = ருத்ரர்கள் எனப் பன்மை கொள்க


அனுவாகம் – 4

எண்திசையில் தாக்குவான் போற்றி
பல்விசையின் வீரவான் போற்றி
நல்லசக்தி தோற்றம் போற்றி
மென்மைகொண்ட சக்தி போற்றி
வன்மைகொண்ட சக்தி போற்றி


ஆசைகொண்ட பாசன் போற்றி
ஆசைகொண்டோர் ஈசன் போற்றி

வேறுவேறு தன்மை யோடு
பல்லினத்தில் உறைவோய் போற்றி
இனங்கள் யாவின் தலைவன் போற்றி
கடவுள்தன்னின் சேவை போற்றி
சேவைஏற்கும் அரசே போற்றி

உருவமானத் தோற்றம் போற்றி
அருவமான ஏற்றம் போற்றி

அண்டத்தினும் பெரிது போற்றி
அணுவுக்குள்நீ அணுவே போற்றி

தேர்செலுத்தும் வலிமை போற்றி
தேரிலாத எளிமை போற்றி
தேரின்வடிவம் நீயே போற்றி
தேர்செலுத்தும் மாய போற்றி

தேரைஉடையத் தலைவன் போற்றி
படைகள்தன்னின் வடிவம் போற்றி
படைநடத்தும் துடிப்பும் போற்றி
பகை முடிக்கும் திறமை போற்றி

தேர்நடத்தும் வீரன் போற்றி
தேர்பழகும் சிஷ்யன் போற்றி
தேர்வடிக்கும் தச்சன் போற்றி
தேர்முடிக்கும் உச்சன் போற்றி
*உச்சன் = Subject Matter Expert

பாண்டம்செய்யும் குயவன் போற்றி
உலோகக்கை வினைஞன் போற்றி


பறவைவேட்டை வேடன் போற்றி
மீனவனின் வடிவம்போற்றி

வில்லும்அம்பும் செய்வோன் போற்றி
வில்லின்அம்பு எய்வோன் போற்றி

வேட்டை நாயின் வேகம் போற்றி
வேட்டைக் காரன் வடிவம் போற்றி



அனுவாகம் – 5

படைத்தழிக்கும் சிவனும் போற்றி
அழித்தடக்கும் ருத்ரன் போற்றி


நீலகண்ட மாயும் வெள்ளைக்
கண்டமாகும் ஒருவன் போற்றி

சுருண்டசடை சிவனும் போற்றி
மழித்தமுகத்தின் அவனும் போற்றி

நூரின் நூறு கண்ணன் போற்றி
நூறுவில்லின் மன்னன் போற்றி

மலையில் திரியும் ஒருவன் போற்றி
உயிரில் உறையும் இறையே போற்றி

அருளிச் செய்யும் அன்னை போற்றி
கரத்தில் வில்லின் அழகன் போற்றி

சிறந்ததான மாட்சி போற்றி
கம்பீரத்தின் காட்சி போற்றி

ஆதியான சிறப்பு போற்றி
ஓதிடலின் இருப்பு போற்றி
(ஓதும் வேதத்தினில் இருப்பவன் )

எங்கும்நிறை ஒருவன் போற்றி
செல்லும்மிகுந்த வேகம் போற்றி

சீரின்எழுச்சி வேகம் போற்றி
நீரின்வீழ்ச்சி வேகம் போற்றி

நிலைத்திடாத அலைகள் போற்றி
நிலைத்தநீரின் அமைதி போற்றி

சீரும்நீரின் வெள்ளம் போற்றி
நீரும்சூழும் தீவு போற்றி



அனுவாகம் – 6

துடிப்புகொண்ட இளமை போற்றி
வடித்த ஞான முதுமை போற்றி
முழுமுதற்க் கடவுள் போற்றி
விளைவதன் உள்ளும் போற்றி

துள்ளியாடும் இளமை போற்றி
பல்லிலாத மழலை போற்றி

இடையிலாடும் பாகம் போற்றி
அடித்தளத்து வேரும் போற்றி

நன்மை போற்றி தீமை போற்றி
யாவும் கொண்ட இயக்கம் போற்றி

பித்ருலோகம் இருப்போய் போற்றி
பரமபதத்தின் தலைவா போற்றி

பயிர்கள் கொண்ட பசுமை போற்றி
பண்ணை நிலத்தின் வாசி போற்றி

வேதம் போற்றும் தலைவா போற்றி
வே தாந்தம் கண்ட இறைவா போற்றி

காடுதன்னில் மரம் நீ போற்றி
நிழலில் தோன்றும் கொடியே போற்றி

தோன்றும் நல்ல ஒலியே போற்றி
எதிரொலியும் நீயே போற்றி

விரைந்தநல் கரத்தவன் பறந்துதேரில் செல்பவன்
சினந்துபகை முடிப்பவன் சிறந்ததான வீரனாம்
நினைந்துநீர் வடித்திட அருளுகின்ற ருத்திரன்
அவன்கழல் நினைத்துமே போற்றிபோற்றி போற்றியே

கவச மணிந்த வீரன் போற்றி
கவச மாகும் காவல் போற்றி
வேதம் போற்றும் தலைவன் போற்றி
போற்றும் படைத் தலைவன் போற்றி



அனுவாகம் – 7

குழலின்இனிய ஒலியே போற்றி
அடிக்கும்மேள தாளம் போற்றி
புறம்இடாத வீரன் போற்றி


வேவுபார்க்கும் தீரன் போற்றி
ஒற்றர்களில் ஒற்றன் போற்றி

சேவகரில் ஒருவன் போற்றி
வாள்எடுத்த வீரன் போற்றி
வில்தொடுத்த தீரன் போற்றி
கூரினம்பு உடையோன் போற்றி
ஆயுதங்கள் அடைந்தோன் போற்றி

ஒற்றையடிப் பாதை மற்றும்
பரந்தபாதை தன்னில் செல்லும்
சிறந்தஒருவன் போற்றி போற்றி

குறுகிஓடும் ஓடை போற்றி
பெருகும்நீரின் வீழ்ச்சி போற்றி


சேரில்உறையும் சீரும் போற்றி
ஏரியிலே ஏற்றம் போற்றி
ஓடிச் செல்லும் ஆறு போற்றி
தேங்கி இருக்கும் குட்டை போற்றி

கிணற்றிலுள்ள நீயே குட்டை
தன்னில்உள்ள தோற்றம் போற்றி

வளமைகொடுக்கும் மழையே போற்றி
பஞ்சம்வறுமை நீயே போற்றி
வானம் கொண்ட மேகம் போற்றி
மேகம் தன்னில் மின்னல் போற்றி
சாலப்பெய்யும் மழையே போற்றி
ஆலங்கட்டி மழையும் போற்றி


உலகம் தன்னில் நிலமும் போற்றி
உலவும் மிருகம் யாவும் போற்றி



அனுவாகம் – 8

இருக்கும்பாதி உமையாய் போற்றி
கலக்கும்மாயை அறுப்போய் போற்றி


அடர்ந்த கரும் சிவப்பு போற்றி
மணந்த மலரின் சிவப்பும் போற்றி

மகிழ்ச்சி தரும் ஒருவன் போற்றி
உயிர்கள் படைக்கும் இறைவன் போற்றி

பகையை பயத்தில் ஆழ்த்தும் சக்தி
பகை முடிக்கும் கடுமை போற்றி

நெருங்கும்பகை அழிப்போய் போற்றி
தூரச்சென்று முடிப்போய் போற்றி

கர்வம்தன்னை அழிப்போய் போற்றி
தொடர்பிலதனைத் தொலைப்போய் போற்றி

பசுமை மரம் உறைவோய் போற்றி
பிரணவம் தனில் ஒலியே போற்றி

உலகசுகம் தருவோய் போற்றி
பரமபதம் அருள்வோய் போற்றி

இம்மை தன்னில் பொருளே போற்றி
மறுமை தன்னில் அருளே போற்றி

மங்கலமே போற்றி போற்றி
மங்கலத்தின் மங்கலம் போற்றி

புனித ஸ்தலத்தில் உறைவோய் போற்றி
நதிகள் கரையில் இருப்போய் போற்றி

கடலின் கரையில் இருப்போய் போற்றி
சமுத்திரத்தில் உறைவோய் போற்றி

பிறவிக் கடலைக் கடக்க உதவும்
சிறப்பிலுறையும் இறைவா போற்றி

உலகில் பிறக்கும் உயிர்கள் தன்னில்
மறைந்திருக்கும் ஒளியே போற்றி

மெல்லியதாம் புல்லே போற்றி
நிலையிலாத நுரையே போற்றி

ஆற்றிலோடும் நீரே போற்றி
ஆற்றங்கரை மணலே போற்றி



அனுவாகம் – 9

செழிப்புடை நிலமே போற்றி
தேய்விலும் உயிரே போற்றி

கரடு முரடு பூமி போற்றி
வளமை கொஞ்சும் நிலமும் போற்றி

சடையின்கிரீடம் கொண்டாய் போற்றி
அடைவதான பொருளே போற்றி

மாட்டுத் தொழுவம் தன்னில் போற்றி
வீட்டுப் பண்ணை நீயே போற்றி

அரண்மனை யாம் வீடு தன்னில்
சாய்ந்த ஓய்வின் வடிவம் போற்றி

முரண்டிருக்கும் கல்லும் முள்ளும்
இருந்திருக்கும் இறைவா போற்றி

ஆழ்ந்த நீரில் வாழும் இறையே
வீழ்ந்த பனியின் துளியே போற்றி

அணுவில்உறையும் அணுவே போற்றி
தூசினுள்ளே தூசு போற்றி

காய்ந்தசருகுத் தோற்றம் போற்றி
காய்ந்திடாத ஈரம் போற்றி

கடும் பரப்பில் வாழ்வோய் போற்றி
பசுமைப் புல்லில் உறைவோய் போற்றி

பூமி தன்னில் சாமி போற்றி
நதிகள் தன்னில் அலையே போற்றி

காய்ந்த தான சருகினுள்ளும்
பசுமைகொண்ட இலைகள் உள்ளும்

உறையும் இறைமை நீயே போற்றி
ஆயுதங்கள் கொண்டு பகையைப்

பதற வைக்கும் ருத்ரகரின்
பெருமை கொண்ட வீரம் போற்றி

சிறிதே அழிக்கும் ருத்ரகர்கள்
பெரிதில் தொலைக்கும் வீரராவர்


அவர்கள்பெருமை போற்றி போற்றி
செல்வம் பொழியும் செல்வம் போற்றி

தெய்வம் தன்னின் தெய்வம் போற்றி
அழிந்திடாத ஆதி போற்றி
நெஞ்சில்உறையும் சோதி போற்றி

உயிர்கள்தன்னின் செயல்கள் தன்னை
நன்மை தீமை என்பதாகப்
பகுத்தறியும் சிறப்பு போற்றி
பாவம் தன்னை வேரறுக்கும்
ஞானம் போற்றி போதன் போற்றி
புல்லினுள்ளும் புவியின் உள்ளும்
உறைந்திருக்கும் சக்தி போற்றி



அனுவாகம் – 10

அழிக்கும் தொழிலைப் புரியும் இறைவா
பிழைக்க உணவு அருளும் இறைவா
சிவந்த உருவ நீல கண்டா
பவத்தி லிருந்து விலகும் தலைவா

மாந்தர்மனதில் பயத்தைப்போக்கு மிருகங்களின் பயமும்போக்கு
தருமம்விலகிச் சென்றிடாமல் புரியவேண்டும் அருளும்இறைவா
கருமமுடலில் பிடித்ததாலே நோயில்மாளாச் செய்கதலைவா
தருமவாழ்வில் மனதும்நிலைக்க புரியவேண்டும் அருளைஇறைவா

மங்கலத்தின் வடிவேசிவனே கண்திறந்து அருளுபவனே
உலகில்தோன்றும் நோய்கள்தனக்கு மருந்துமான தெய்வம்கனன்று
சாடிச்சாடி செய்திடாமல் கருணைகொண்டு இன்பம்அருளு
கோடிகோடி வணக்கம்உனக்கு கொடுத்திருப்பாய் மகிழ்ச்சிஎமக்கு

சுருண்டதான சடையுடன் பகைமுடித் திடும்சிவன்
சரண்அடைந்து நாமுமே கேட்டுவேண்டி நிற்பது
பிறந்திருக்கும் மாந்தரும் நிறைந்துநிற்கும் பிராணியும்
ஊரிலுள்ள யாவையும் காக்கவேண்டும் என்பதே
அவர்கள்உடலில் நோயுமே தவிர்க்கவேண்டும் என்பதே
மனம்தனில் மகிழ்ச்சியும் *மனம்உயர் முயற்சியும்
அளிக்கவேண்டும் என்பதே முக்திவேண்டும் என்பதே
முன்னிருந்த மனுவுமே உன்னருளால் பெற்றதாய்
எண்ணிறந்த சிறப்புடை சிவன்அருள் பிறக்கவே
கண்ணின்மணி யாகநீ காக்கவேண்டும் என்பதே


*மனம்உயர் முயற்சியும் = யோக சாதனை

அடக்கிடும் சதாசிவா பவம்தனைக் களைபவா
விடத்துடை பராபரா வயதில்நல்ல முதியவர்
துடித்துநிற்கு மிளையவர் *கருப்படும் சிறார்களும்
மதித்ததாயும் தந்தையும் சதைப்படும் உடல்தனும்
வதைத்திடா திருந்திடு பதைத்திடாமல் காத்திடு

*கருப்படும் = கருவிலுள்ள

தொழுதுநின்று வேண்டினோம் அழுதிடாமல் வைத்திடு
கழுத்துநின்ற பாம்பனே புரம்எரித்த கண்ணனே
சினப்படாமல் எங்களின் பிள்ளைவேலை யாளுடன்
பயன்தரும் பிராணியும் நாங்கள்கொண்ட ஆயுளும்
பயப்படாமல் வைத்திரு பயன்படுவோம் என்றிரு
சுத்தசத்வ ரூபனே மங்கலத்தின் வடிவனே
பத்திதன்னில் இறங்கிடு மனம்இறங்கிக் காத்திடு
சத்தியத்தில் வைத்திடு முத்திதன்னைத் தந்திடு

மங்கைபாதி கொண்டவா மண்டையோட்டுத் தாண்டவா
பகைமுடித் திருப்பவா சிகைசடைத் திரித்தவா
என்றுமிளமை தன்னுடன் நின்றுநிலைக்கும் அழகுடன்
கொன்றழிக்கும் சிம்மமாய் பயம்அளித் திருப்பவா
நினைவினில் இருப்பவா நினைப்பவர் தனைமனம்
கனிந்துமே அருளுவாய் அழித்திடா திருந்துமே
பதர்தனை அழிப்பவா பக்தர்தன்னைக் காப்பவா

துதித்திருக்கு மெங்களை உறுத்தி நிற்குமானதாய்
சாவினை கொடுத்திடா திருந்துநீ அருள்வது
மட்டுமின்றி எங்களின் மனம்தனில் இருந்திடு
பிறந்திருக்கும் எங்களின் பிள்ளைகளைக் காத்திடு

மங்கலத்தின் வடிவினன் மங்கலங்கள் அருள்பவன்
மங்கலத்தை அருளிடு நன்மைகள் அளித்திடு
உறுத்துகின்ற ஆயுதம் தனைஎடுத்துத் தூரமாய்
விரைந்துசென்று வைத்திடு வரம்கொடுத்துக் காத்திடு

பினாகவில்லும் கையிலே புலியினாடை தன்னிலே
சம்புவாகஅருள்கொடு சாம்பசிவா காத்திடு
சிவம்தனை நினைமனம் தனில்விரைந் துவந்திடு
தவம்புரிந்த பக்தரின் பவம்களைந்து காத்திடு



அனுவாகம் – 11

மண்ணுடை நிலத்திலும் நீர்எடுத்தக் கடலிலும்
விண்ணுடைத் தவானிலும் இடைப்படும் இடத்திலும்
உலகமெங்கும் ஆயிரம் ஆயிரமாய் நிறைந்திரும்
பல்வகை உருத்திரர் களின்சிறந்த வில்லின்நாண்
தனைப்பிரித் தெடுத்துமே வில்லினை எடுத்துமே
செயல்படாம லாயிரம் யோசனையின் தூரமாய்
மறைத்துவைக்கச் செய்யுவோம் தாக்குமெண்ணம் நீக்குவோம்

நீலகண்ட ருத்ரனும் வெண்மைகொண்ட கண்டனும்
கீழுலகில் உறைந்திடும் ருத்திரர்கள் தன்னுடன்
மரத்துறையும் ருத்திரர் மஞ்சள்வண்ண ருத்திரர்
சிவந்தகண்ட ருத்திரர் நீலகண்ட ருத்திரர்
சடைமுடி உடைத்தவர் மழித்திடும் முகத்தவர்
பேய்பிசாசு போன்றவை தனின்தலை மைருத்திரர்

உணவளிக்கும் ருத்திரர் தாகம்தீர்க்கும் ருத்திரர்
செல்லும்பாதை தன்னிலே வந்துகாக்கும் ருத்திரர்
கத்திகையில் கொண்டுமே வாளைஉரையில் வைத்துமே
ஸ்தலங்களில் திரிந்திடும் சிறந்தபல ருத்திரர்

இவர்கள்மட்டு மின்றியே மற்றுமுள்ள ருத்திரர்
பலரும்எம்மைத் தீங்கிடா வண்ணம்அவர்கள் வில்லையும்
எடுத்துஆயி ரம்களின் யோசனை கடந்துமே
வீசிஎறியச் செய்யுவோம் பாதம்பணிந்து வேண்டுவோம்

வடிவம்பல எடுத்துமே உணவுகாற்று மழைதனை
ஆயுதமாய்க் கொண்டுமா காயம்விண்ணும் மண்ணிலும்
கிழக்குமேற்கு வடக்கிலும் தெற்குதிசை தன்னிலும்
நிறைந்தருத்ர தேவனே வணங்குகிறோம் உன்னையே
காத்திடுவாய் எங்களை மகிழ்வினையே நல்குவாய்
துன்பம்தரும் யாரையும் நின்வாயிலிட்டு மெல்லுவாய்

சுகந்தமுக்கண் மூலவா நன்மைஅருளும் தூயவா
பிறந்திறந்து செய்திடா வண்ணம்எம்மைக் காக்கவா
மூவுலகின் நாயகா மூளும்தீயில் தூயவா
நீரும்நிலமும் ஆனவா மருந்துமாகச் சிறந்தவா
நல்வினைகள் மூலமாய் வல்வினைகள் போக்குவாய்
பல்பிறப் பருப்பவா அருள்தரும் சதாசிவா
சொல்படா திருப்பவா கண்படா திருந்திடா
தருள்தரும் மகாதேவா மருள்களை சதாசிவா

பிறப்பிறப் பறுத்திடும் சிவன்பதம் துதித்திடும்
கரம்சிறந்த தாயிடும் வரம்தனைக் கொடுப்பதாய்
சிறந்திடும் மலம்தனைக் களைந்திடும் நிலைதரும்
பறந்திடும் புலன்களை நிலைக்குளே படுத்திடும்

புலப்படும் சிதம்தனில் சோதிசோதி சோதியே
நிலைப்படும் மனம்தனில் சாந்தி சாந்தி சாந்தியே

ஓம் நமசிவாய



No comments:

Post a Comment