Saturday, March 3, 2012

புருஷ சுக்தம்


1
எண்ணிறந்த தாய்ச்சிரம் கரம்பதம் எழுந்ததாய்
மண்ணிருந்து விண்ணுமாய் நிறைந்திருக்கும் புருஷனாம்.

2.
பிறந்திருக்கும் யாவிலும் பிறக்குமான யாவிலும்
நிறைந்திருக்கு மானவன் சிறந்தபுருஷ னேயவன்
இறந்திடா திருக்குமமரத் தன்மைதன்னை ஆள்பவன்
பரந்தவண்ண மாகவன்னம் கொண்டுமே வளர்பவன்.

3-4
கண்ணில்காணும் யாவும்அவன் மேன்மையால் விளைந்ததே
எண்ணிலா திருக்குமவன் பெருமைசொல் படாததே
மனம்படாத வண்ணமது யாவையும் கடந்ததே
மன்னிடப் பிறந்ததும் உயிரிலா ஜடங்களும்
அவனில்தோன்று கின்றதே அவன்பாதிதன்னில் பாதியே
என்றுமிரும் விதமுமான மீதிவிண்ணின் பாலதே

5
அவனிலிருந்து யாவுமே தோன்றுவதாய் ஆனது
அவனையன்றி வேறிலா விராடபுருஷ னானது
அவன்வளர்ந்து நிறைந்துமே அண்டமாகப் பெருத்தது
அவனைவிளக்க சொல்லிலா நிலையுமேதான் ஆகுது

6
தேவர்களும் கூடிச்சிறந்த யாகம்செய்யத் துணிந்தனர்
சிறந்தபெரும் புருஷனையே படையலாகக் கொடுத்தனர்
வசந்தம்அதில் நெய்யுமாம் கோடைசமித்து மானதாம்
இலயுமுதிர் காலம்நன்றி சொல்வதாக அமைந்ததாம்

7

சிறந்தவந்த ஹோமகுண்டம் எல்லையாகக் கொண்டது
பஞ்சபூதம் மட்டுமின்றி இரவும்பகலும் தானது
இவற்றுடனே ஐம்புலனும் ஐந்தொழிலின் அவயவமும்
மனதின்நான்கு உணர்வுகளும் சேர்ந்துசமித்து மானது

8-9
யாகப்புருஷன் தர்ப்பத்திலே கிடக்கச்செய்தர் முனிவரும்
யாவும்விழுங்கி யாகத்திலே முடிவினிலே தோன்றின
நெய்யின்வெண்ணை அவைகள்கொண்ட தயிருமென்றே ஆயின
வாழ்விலுதவும் மிருகங்களும் காடும்ஊரும் தோன்றின

10-11
பிறகுரிக்கு யஜுர்சாம வேதங்களும் உதித்தன
சிறந்துவிளங்கும் செய்யுள்சந்தம் தானுமங்கு பிறந்தன
ஆடுமாடு ஒடும்குதிரை மற்றுமிரண்டு வரிசையில்
 பற்களுள்ள மிருகங்களும் வரிசையாக எழுந்தன

12
பிறகு தெரியவந்தது கேள்விக்கெல்லாம் பதிலது
எப்படித்தான் புருஷனைப் பகுத்துநாமும் பார்ப்பது?
முகத்தில் என்னவந்தது? கைகளென்ன வாயிற்று?
நடக்கும்கால்கள் தாங்கும்துடைகள் என்னவாய்த்தான் ஆனது?

13-14
வருணம்நான்கு என்பது இப்படித்தான் பிறந்தது
வாயில்பிறந்த அந்தணர் கையில்பிறந்த அரசர்கள்
தொடையில்தோன்றும் வைசியர் காலில்எழுந்த சூத்திரர்
மனதில்மதியும் எழுந்தது *விழியுமாதிக் கொழுந்தது
தீயுமிந்த்ரன் உதயமும் வாயிலிருந்தே நிகழ்ந்தது
பாயும்காற்று எழுந்ததோ தூயன்மூச்சி லிருந்துமே

*ஆதி=சூரியன்

15
நாபிக்கமலம் தன்னிலே *வெளியுமுதய மானது
சிரத்தினின்று பிறந்தது வானுலகம் தானது
காலினின்று உலகமும் உதயமாகிச் சுழன்றது
காதினின்று திசைகளும் தோன்றிப்பரந்து நின்றது

*வெளி = Space

16-20
சிறந்திருக்கும் புருஷனை பரந்திருக்கும் ஒருவனை
தளைப்படுத்தும் மாயையின் இருள்கடந்த ஒன்றுமாய்
ஒளிர்ந்திருக்கும் சூரியன் போலநானும் உணர்கிறேன்
விளைந்தயாவும் வகைப்படப் படர்ந்திருக்கும் அவனிடம்.
விளைத்துநிற்கும் புருஷனே புகழவல்ல ஞானமாம்
படைத்துநிற்கும் பிரமனும் தேவர்களின் அரசனும்
துதித்திருக்கும் புருஷனை மனதில்த்யானம் கொள்ளலே
கொடுத்திருக்கும் விடுதலை வழியுமொன்று வேறிலை

 தேவர்களும் யாகத்திலே யாகம்தன்னைப் படைத்தனர்
யாவருமே உணர்ந்திடவே முதலில்செய்த தர்மமாம்
முயன்றுமுன்னோர் செய்ததுபோல் அவரும்செய்து மகிழ்ந்தனர்
உயர்ந்திடவே சொர்க்கத்திலே இடமும்பிடித்து வாழ்ந்தனர்

ஐந்துபூதம் படைத்தவன் அதனைஆண்டச் சிறப்பவன்
சிறந்ததலைவ னேயவன் யாவிலுமே நிறைபவன்
நிறைந்தமட்டு மன்றியாவும் கடந்துமேயும் இருப்பவன்
பிறந்திடாத ஆதிமுதல்வன் பெருமையைநான் உணர்கிறேன்..!

21

பிறந்திடாத ஆதியாம் பிறக்கச்செய்யும் மாட்சியாம்
பிறந்திருக்கும் யாவினுள்ளும் உறைந்திருக்கும் சாட்சியாம்
ஞானம்வேண்டி த்யானம்கொள்ளும் சித்தர்களும் முனிவரும்
மூலம்என்று அறிந்திடுவர் விராடமான புருஷனை

22
போற்றிபோற்றி தேவர்க்கெல்லாம் ஒளிவழங்கும் சக்திபோற்றி
போற்றிபோற்றி தேவர்க்கெல்லாம் தலைவனான புருஷன்போற்றி
போற்றிபோற்றி எதிலும்ஒளிரும் சிறந்தநிறை பரமன்போற்றி
போற்றிபோற்றி எங்கும்நிறை பரமனான பிரம்மம்போற்றி

23
சிறந்த பரமன் நிறைந்த புருஷன்
 இவனை உணர்ந்த தேவர் சொல்வர்
முழுதும் இவனை உணர்ந்த ஒருவன்
தொழுது ஏத்தும் தலைவன் என்பர்

24
திருவும் உயர்வும் உனது துணைகள்
இரவும் பகலும் உனது நிலைகள்
விண்ணின் மீன்கள் உன்னில் அழகு
விண்ணும் மண்ணும் தாடை யாகும்
அருள்க வரமும் தருக இன்பம்
நிலைகள் மூன்றில் தருக அமைதி
விலையு மிலா முக்தி அருள்க
அளவு மிலா விரையின் புருஷ .!

யக்ஞம் வளர்க த்யாகம் வளர்க
த்யாக உணர்வில் யக்ஞம் புரியும்
யாரும் வாழ்க ஊரும் வாழ்க
மனித குலத்தில் புருஷ உந்தன்
அளவி லாத அருளும் பொழிக
களை இலாமல் பயிரும் வளர்க
இரண்டு காலும் நான்கு காலும்
கொண்ட தான ப்ராணி வாழ்க
யாவும் வாழ சீரும் சேர
தாயுமான புருஷன் அருள்க

_________









No comments:

Post a Comment