கண்ணனை மணந்தேனடி
என்னுயிர்த்
தோழி கேளொரு சேதி
கண்ணனை நானும்
மணந்திட்டேன் நாடி
முடிவிலாத்
தலைவன் கண்ணனென் கணவன்
உடைபடா
தவனே சிறந்தவென் கண்ணன்
எண்பத்து நாலு லக்ஷத்தின் பிறப்புகள்
என்பது மாகும் கஷ்டத்தின் நினைவுகள்
கடந்து வந்தேனே உழன்று செத்தேனே
நீந்தவே கடினம் சம்சாரம் தோழி
உலகத்தின் வாழ்வும் உறவில்வந் தவையும்
கலக்கிடும் மயக்கம் தந்திடும் துன்பம்
அளித்திடும் வலியில் அதிர்ந்து நின்றேனே
விலக்கிட முடியாத் தளைகளே தோழி
குடும்பமும் சேர்ந்த உறவினர் எவரும்
கொடுப்பது துன்பம் சுயநல உருவம்
மகிழ்ந்திடும் இன்பம் தந்திடும் தலைவன்
மணந்தபின் இலையே மயக்கிடும் உலகே
எடுத்தவிப் பிறப்பும் குடும்பத்தின் பொறுப்பும்
உழல்கின்ற தவிப்பும் அடைந்திடும் துன்பம்
கடலினில் எழும்பும் அலையெனத் தோன்றும்
அளவினில் அடங்கா விதத்தினில் பெருகும்
கண்ணனை மனதில் நினைத்திட்ட பிறகு
துணையெனக் காக்கும் ஞானியர் அருகில்
கணந்தோறும் தோன்றும் துயரங்கள் இலையே
மனத்தினில் தோன்றும் ஐயமும் இலையே
கண்ணனின்
அருளில் அவன்அருள் மழையில்
மண்ணினில்
தோன்றும் மயக்கங்கள் கரையும்
கண்ணினில்
தோன்றும் விதமென நெஞ்சில்
உண்மையும் தெரியும் ஜோதியும் ஒளிரும்
விரலினில்
மலையைத் தாங்கிய கிரிதரன்
குழல்தரு இசையில் மயக்கிய திருமகன்
ஒருவனே மீரா அடைக்கல நாயகன்
சுயமிலா நண்பன் தூயவன் கண்ணன்
___________________
No comments:
Post a Comment