Thursday, December 8, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 41 - 50

41. (375-385)
உத்பவ:ஷோபணோ தேவஸ் ஸீகர்ப: பரமேஸ்வர: |
கரணம் காரணம் கர்தா விகர்தா கஹநோகுஹ: ||

தளைதனில் படுத்துவான் தளைகளைக் களைபவன் 
உலகனைத்தி னுள்ளிருந் துயிர்க்கதிர் வளிப்பவன்
அலகிலா விதம்விளை யாட்டினில் இருப்பவன்
நிலைப்பதாய் இலக்குமி உடனுறைந் திருப்பவன் 

ஒப்பிலாத்  தலைஅவன் தப்பிலாப்பே ரரசவன்
தானுமாகக் காரணன் தன்னைத்தாங்கும் நாரணன்
தன்னைவந்து யாரும்கொள்ளத் தூண்டுகின்ற காரியன்
தன்னில்யாவும் புரிபவன்  தானேபடைத்துக்  களிப்பவன்
அறிந்திடவே அறிதவன்  புரிந்திடாத புதிரவன்
மறையின்பொருள் ஆகநின்று காத்தருளும் இறையவன்

42. (386-395)
வ்யவஸாயோ வ்வ்ஸ்த்தாநஸ் ஸம்ஸ்ததாநஸ் ஸ்த்தாநதோ த்ருவ: |
பரர்த்தி: பரம ஸ்பஷ்டஸ் துஷ்ட: புஷ்டஸ் ஸுபேகஷண: ||
  
முதலும் முடிவுமானவன் எதிலும் மையமானவன் 
நிலைத்திருக்கும் நிலையவன் ஆதாரமும் ஆனவன்
தெள்ளத்தெளிய  தெரிந்திருக்கும் நல்லுணர்வின் முழுமையாம்
ஆனந்தமய மங்களன் தேர்ந்தநல்லக் கண்ணனாம்  

43. (396-405)
ராமோ விராமோ விரதோ மார்கோ நேயோ நயோsய: |
வீரஸ் ஸக்திமதாம் ஸ்ரேஷ்டோ தர்மோ தர்மவிநுத்தம: ||

மனதைரமிக்கும் ராமனாம் அடைக்கலத்தை அளிப்பவன்
எவரும்விரும்பும் ஒருவனாம் உயர்ந்தபாதை காட்டுவான்
யாரும்அடிமை கொண்டவன் பக்தர்க்கடிமை யானவன்
யாரும்மயங்கிச் செல்லும்வண்ணம் கவர்ச்சிகொண்ட தலைவனாம் 
யாரும்செல்லப் பாதையாம் அவனைநடத்த யாருளர் 
துணிவுமிக்கத்  தூய்மையாம்   கனிவின்அவ தாரமாம்
என்றும்தர்மம் காத்துநிற்கும் தருமதேவன் தானிவன்

44. (406-416)
வைகுண்ட்ட:புருஷ:ப்ராண:ப்ராணத:ப்ரணம:ப்ரது: |
ஹிரண்யகர்பஸ் ஸத்ருக்நோ வ்யாப்தோ வாயுரதோகஷஜ: ||

மோக்ஷமடையத் துணையிவன் தூய்மைநல்கும்  தூயவன்
உயிரின் மூச்சுமானவன் உயிர்கொடுக்கும் தாயவன்
வணங்கத்தக்க இறையவன் யார்க்கும்தெரிந்த ஒருவனாம்
மகிழ்ச்சிநெஞ்சில் நிறைப்பவன் எதிரிவென்று முடிப்பவன்
காதலாகிக் கனிபவன் ஓதநெஞ்சில் இனிப்பவன்
கசிந்துகண்ணீர் மல்கும்நெஞ்சில் வசித்துநல்கும்ஆண்டவன்
காலம்கடந்து வளர்ந்துநிற்கும் குறைபடாத பிறப்பவன்

45. (417-426)
ருதுஸ் ஸுதரஸந:கால:பரமேஷ்டீ பரிக்ரஹ: |
உக்ரஸ் ஸம்வத்ஸரோ தக்ஷோ விஸ்ராமோ விஸ்வதக்ஷிண: ||

பருவகால மானவன் இனியஉருவின் அழகனாம்
புரியும்கருமத் தின்படி கணக்கில்அருளும்  அரசனாம்  
மனதில்அவனைக் கொண்டிட தன்னில்சேர்க்கும் இறைவனாம்
வேகம்கொண்ட வல்லவன்   யாவும்உறையும் வீடவன்
கனிந்துஎன்றும்  காப்பவன் அமைதிகொண்டு பார்ப்பவன்

46. (427-435)
விஸ்தாரஸ் ஸத்தாவரஸ் ஸ்த்தாணு:ப்ரமாணம் பீஜமவ்யயம்!
அரத்தோsநர்த்தோ மஹாகோஸோ மஹாபோகோ மஹாதந: ||

பறந்துவிரிந்து இருப்பவன் நிலையின்கோணா  நிலையவன்
நிறைந்தஅதி காரனாம் பிறந்தஎதிலும் விதையுமாம்
யாரும்அடையும் நோக்கமாம் அவனுக்கில்லை நோக்கமாம்
சிறந்தபுதையல் போன்றவன் எவர்க்கும்வாரி வழங்குவான்
நிறைந்ததனத்தை உடையவன்  ஆனந்தத்தின் உறைவிடம்

47. (436-445)
அநிர்வண்ணஸ் ஸ்ததவிஷ்ட்டோ பூர் தர்மயூபோ மஹாமக: |
நக்ஷத்ர நேமிர் நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாமஸ் ஸமீஹந: ||

மகத்துவத்தின் மன்னனாம் விரக்தியற்ற மலர்ச்சியாம்
அனைத்தும்காக்கும் நாயகன் அணைத்துநிற்பான் தருமத்தை
யஞ்யங்களின் நாயகன் யஞ்யவடிவ  மானவன்
விண்ணின்மீன்கள் யாவையும் இயக்குகின்ற ஒருவனாம்
திண்ணமாக அவைகளில் ஒளிர்ந்துநிற்கும் இறைவனாம்  
தகுதிவாய்ந்த திறத்தவன் இவன்முன்எவனும் சிறுத்தவன்
படைத்தயாவும் காவல்கொள்ளும் ஆவல்மிகவும் கொள்பவன்

48. (446-455)
யஞ்ஞ இஜ்யோ மஹேஜ்யஸ்ச க்ருதுஸ் ஸத்ரம் ஸதாம் கதி: |
ஸர்வதர்ஸீ நிவ்ருதாத்மா ஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம் !!  


யாகமாக இருப்பவன் யாகங்களின் நாயகன்
ஒருவனான தேவனாம் தேவர்களின் தலைவனாம்
நல்லோர்காக்கும் காவலன் பக்திசெலுத்து மோர்ஸ்தலன்* 
தூயக்கண்ணின் மாலவன்  மாயஉலகின் மேலவன்
யாவும்காணும் திறத்தவன் யாதுமறிந்த கருத்தவன்

ஸ்தலன்*= இடமாக இருப்பவன்

49. (456-465)
ஸுவ்ரதஸ் ஸுமுகஸ் ஸூக்ஷமஸ் ஸுகோஷஸ் ஸுகதஸ் ஸுஹ்ருத் !
மநோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர் விதாரண: !!              

விரதங்களின் தலைவனாம் விரதம்கொள்ளும்  ஒருவனாம்
முகத்தின்அழகு அகத்திலும் கொண்டிருக்கும் அழகிவன்
நுண்மையான மேன்மையாம் உணர்தற்க்கரிய அரியுமாம்
வேதகோஷ மானவன் ஆனந்தத்தைத் தருபவன்
நல்லஉள்ள முள்ளவன் கொள்ளச்சிறந்த நண்பனாம்
உள்ளம்கொள்ளை கொள்பவன் கோபம்தன்னை வெல்பவன்
எல்லையில்லா திறமுடைய ஆயுதங்கள் கொண்டவன்
தொல்லைதரும் ஊழ்வினையை நொடியிலறுக்கும் அருளிவன்  

50. (466-475)
ஸ்வாபநஸ் ஸ்வ வஸோ வ்யாபீ நைகாத்மா நைக கர்மக்ருத்!
வத்ஸரோ வத்ஸலோ வத்ஸி ரத்ந கர்போ தநேஸ்வர: ||

பக்தர்உறக்கம் கொள்ளவேதா லேலோபாடும் தாயது
அதுவுமென்றும் கொள்வதுமே அனந்தசயனம் தானது     
எங்கும்நிறைந்து இருப்பது எதிலும்தோன்றும் உருவது 
செய்யும்செயல்கள் யாவிலுமே விளங்கும்திறனு மானது
யாவுமாக நின்றவதனில் யாவும்சென்று ஓயுது
தாயுமாகத்  தோன்றும்பாசம் தன்னில்பசுவு மாகுது 
சேயுமாக உயிர்களதனைக்  கன்றுபோல் சென்றடையுது

__________________


Prev            First           Next
No comments:

Post a Comment