Monday, August 6, 2018

நாரத பக்தி சூத்ரம்





1. பக்தி  நியதி

1-6
பக்திஎன்ப தென்னது என்றுநானும் சொல்கிறேன்
பக்திஎன்ப தாவது அன்பின்உயர் நிலையது
செத்திடாது வைக்கும்அமுதம் கொண்டகடலின் ரசமது
பக்திதன்னை அடைந்திட முழுமைவந்து சேருது
பக்திகொண்ட சித்திலே சித்திவந்து கூடுது
பக்தனான சித்தனுக்கு யாவும்எளிதில் ஆகுது
பக்திவந்து சேர்ந்தநெஞ்சம்  நிறைந்திருக்க லாகுது
முற்றிலுமாய் துறவுநெஞ்சில் கூடிவந் துறைவதால்
வலிகளும் உலகில்தோன்றும் இன்பங்களும் மகிழ்ச்சியும்
கவர்ச்சியும் அசூயையும் வெறுப்பினொடு அன்புமே
முயன்றுமவன் அடைவதில்லை யாவுமொன்று அவனிடம்
உலகவிவரம் இல்லைஅவனும் கொண்டதாகும் துறவறம்


2.அளித்திட வளர்ந்திடும்அளித்திடாயின் தொலைந்திடும்
7-14
பக்தியான தாவது  ஆசையினா லன்றது
பற்றிலாதி ருப்பது பக்திஎன்றே ஆகுது
துறவுகொண் டிருப்பது  நற்செயலை செய்திடாமல்
உறைந்திருத்தல் அன்றது புரிவதாக செயல்கள்செய்து
துறக்கவேண்டு மானது  செயலின்பலனைத் தானது
துயரம்கொண்டு உலகில்வாழும் உயிர்களுக்குப் பயனுற
சிறந்ததான சேவையை செய்திருப்ப தாவது
சிறந்ததாகும் இறைவன்மகிழும் பக்தியுமே தானது

       இறையைத்தவிர மற்றவரைச் சார்ந்திடாத நிலைமையே
இறைவன்மீது கொண்டநல் ஒருமைகொண்ட பக்தியாம்
எதிர்மறையாய் கிளம்பும்தடையைத் தடுத்துமே விலக்கிடும்
கதிர்ஒளியாய்  பாதைகாட்டி பக்திதன்னை வளர்த்திடும்

சாத்திரத்தின் வழிமுறை பக்திவளர்க்கும் விதிமுறை
மனிதகுலச் சேவைகள் இனிப்பதான உதவிகள்
புறக்கணிப்ப தன்றது இறையைச்  சார்ந்துநிற்பது
சிறப்பதான பக்திநெஞ்சில் விலகச்செய்யும் வழியது
இறைவனிருப்ப தாவது மனிதநெஞ்சம்  தானது
சேவைஒன்றில் தானது மாதவனும் மகிழ்வது
கோர்வையாக மந்திரம் மனனம்செய்து சொல்வது
பார்வையாக மாலைகள் தீபதூப  ஒலியுடன்
காமியமாய்ப் பூஜைகள் தினமும்செய்து பெறுவது
பக்திஎன்றா காதது உலகமாயைச் சுழற்சியைப்
பற்றிடவே செய்வது சத்தியத்தை மறைக்குது
பக்திகொள்ள சேவைசெய்  பக்திகொண்டு சேவைசெய்
  
3.பக்திதன்னின் தனி வழி ரிஷிகள் சொன்ன மணி மொழி
15-24
பக்திதன்னின் அம்சமாய் மலரின் நல்லவாசமாய்
சக்திகொண்ட சித்தர்கள் ரிஷிகளான பக்தர்கள்
சொல்வதான உண்மைகள் மனதில்வைக்க நன்மைகள்
தள்ளிடாமல்நீ இதைக்  கேட்கவேண்டும் சொல்வதை

வ்யாசரான பெருமுனி பக்திஎன்று சொல்வது
மாசிலாத இறைவனிடம்  பெருமதிப்பு கொள்வது
கர்கமுனி சொல்வது இப்படியே தானது
பொற்பதங்கள் சேர்ந்திட நல்வழியில் மனம்பட
சத்தியமாம் இறைவனின் புகழ்தனை மேன்மையை
நித்தியத்தி லேமனம் தனில்படும் விதம்பெரு
மகிழ்ச்சிகொண்டு கேட்பதில் பக்திபெருகி வழியுது
சுழற்சிகொண்ட மாயையில் படாமலே தடுக்குது

குணம்அறுந்த மோனத்தில்  மனம்மறைந்த த்யானத்தில்
கணம்பிறந்த ஞானத்தில் பதம்தெரிந்த ஜோதியில்
ஸ்புரித்தெழுந்த தேயது மரித்திடாத தேயது
 ஸ்படிகமான நெஞ்சிலே தேய்தலின்றி வளருது
தடைபடாத வண்ணம்இன்பம் நெஞ்சினிலே பெருக்குது
என்பதுதான் சாண்டில்ய முனிவர்சொன்ன வாக்கது

பக்திபெருகத் தேவையாம் த்யாகமனத்தின் சேவையாம்
சக்திநானு மென்றிடா தென்றுயாவும் அவனிடம்
அர்ப்பணித்தல் பக்தியாம் பொற்பதத்தை  ஓர்கணம்
மறந்திருக்க நேரிடின் துடிப்பதான நெஞ்சிலே
சிறந்தபக்தி கூடுது   பிறந்தஜோதி யானது
நிறைந்திருப்ப தாவது பக்திஎன்றே ஆகுது
கறைபடாத பக்தியின் ரசம்அருந்தி  மாந்திய
நிறைகெடாத நாரத முனிவரிங்கு சொன்னது

பக்திகொள்ளக் காரணம் கண்டிடா  உதாரணம்
சரித்திரத்தி ருக்குது அறிந்திடக் கிடக்குது
கத்திகொண்ட துன்பமாய் புத்திகெட்ட நிலையென
பைத்தியமாய் கோபிகை மாயனைப் பிரிந்திட
பக்திகொண்டு துடித்தது யாவருமே அறிந்தது 
சத்தியமாய் நிலைக்குது கண்டுநீயும் மேம்படு
   
கோபியரின் நிலையிலே  பக்திஊரும் நெஞ்சிலே
பூஜைகொள்ளும் புரந்தரன் மகிமைதன்னை  யேகணம்
பசித்திருப்ப லாவது கடுமைதன்னை விரட்டுது
கண்ணபிரான் மேன்மையை அறிந்திடா திருந்திட
எண்ணமாகக் கோபியர் கொண்டபக்தி யானது
திண்ணமாக பாபியர் காதல் போலுமாகுது  
உண்மைபக்தி யானது இறையின்நினைவில் உறைவது
வண்ணமான மாயையில் புலன்படாத நிலையது  
4. பக்தி பெரும் யுக்தியாம் முக்தி தரும் சக்தியாம்
25-33
பக்திபெரும் யுக்தியாம் முக்திநல்கும் சக்தியாம்
*சக்திசெயல் பாதையும் *புத்திவளர் சத்துவம்
*வித்திலா விதம்சிதம் கடைந்துசெய்யும்  யோகமும்
சத்தியமாய் கடினமாம் பக்தியோன்றே எளிமையாம்
   *கர்ம,ஞான,ராஜ யோகம்
பக்திகொண்ட நெஞ்சுடன் செய்யும்யாவும் சேவையாம்
பற்றிலாத பாங்கினில் வித்திலா  விதத்தினில்
சத்தியத்தின் நினைவினை மேலும்உரம் செய்யுமாம்
சுயநலத்தில் தோன்றிடும் யாகயோகப் பூஜைகள்
பயனுராது இறையிடம் அன்புகொண்ட சேவையும்
தானிலாத அடக்கமும் மட்டுமிறையைச் சேர்ந்ததாம்
தூங்கிடாத  நினைவுடன் வீணிலாத முயற்சியின்
வீங்கிடாத பக்தியின் பாதைமிகவும்  உயர்ந்ததாம்     

பக்திநெஞ்சில் தோன்றிட ஞானம்வேண்டும் என்றுமே
சத்தியத்தி லேமனம் கொண்டசிலர் சொல்கிறார்
புத்திதன்னில் தோன்றிடும் ஞானம்மற்றும் பக்தியும்
ஆன்மஉணர்வு   ஏதது  ஒன்றிலாமல் மற்றது

நான்முகனின் மைந்தனாம் நாரதனின் கூற்றிதாம்  
பக்திதன்னைச் செயலுமாய் செய்திருக்க லாகுமாம்  
வித்திலாத பலனுமாய் பக்தியங்கு  ஆகுமாம்
பக்திசெய்ய பக்தியாய் *பற்றிலாதான் தோன்றுவான்  

அரண்மனையைப்  புகழ்ந்திட அரசன்மகிழ்வ தெப்படி
உணவைக்கண்டு மகிழ்ந்திட பசியும் தீர்வதெப்படி
எனவேநெஞ்சில் பக்தியை கொண்டுமனித சேவையில்
இறைவன்சொன்ன பாதையில் செல்வதொன்று தான்வழி
பிறிதிலையே நல்வழி பக்திக்கேது  *சேர்பழி  
விழுந்திடாது உன்னிடம் உலகமாயை யின்விழி 
*சேர்பழி  = வினைப் பலன்

5.அடங்கி நிற்கும் நெஞ்சினில் அடைக்கலம் புகுந்திடு
34-42
அடங்கிநிற்கும் நெஞ்சினில் அடைக்கலம் புகுந்திடு
நெறியினிற் சிறந்துவாழ்ந் திருக்குநல்லா சாரியர்
பலருமே தெரிந்துநோக்கி பகன்றிருப்ப தாவது
பக்திஎன்று சொல்வது நெஞ்சில்வந்து சேர்வது
புலன்அடக்கம்  கொள்வது பொருள்விலக்கும்நெஞ்சது 
கணம்தோறும் மனத்திலே இறைநினைவு கொள்வது
இறைவன் நாமம்சொல்வது அவனின்புகழ் கேட்பது
மகான்களான ஆத்துமாக் களின்அருள் கிடைப்பது 

மகாத்துமாக்க ளானவர் அருள்கிடைத் திருப்பது
மிகவும்அரிது தானது   கிடைத்திடப் பிறப்பது
மகத்துவத்தின் விளைவது மகத்துவத்தை கொடுப்பது
அரிதுமான உறவது இறையருளால்  விளையுது

பக்திகொண்ட அடியவர்க்கும் முக்திதரும் இறைவனுக்கும்
சற்றிலுமே துளியும்கூட வேற்றுமைகள் இல்லையே  
உலகில்உள்ள உயிர்களுள்ளும் இறைவன்மறைந்து உறைகிறான்
பலனில்மனம்  வைத்திடாமல் மனிதசேவை செய்திடு
பக்திமனத்தில் வந்துநிற்க வழிவேரில்லை உணர்ந்திடு 
பக்திவந்த நெஞ்சில்இறைவன் வந்திடுவான் அறிந்திடு  

6. சுயநலத்தின் வாழ்வு தாண்டி மேலெழும்பி நின்றிடு
43-50
ஆசைகோபம் மதிமயக்கம் அறிவின்அழிவு  யாவையும்
ஓசையின்றிக் கொடுத்திருக்கும் தீயநட்பு ஒழித்திடு
பாசையாக வழுக்கவைக்கும் மாயைதன்னின் சூழலில்
காசேயல்ல அவர்தொடர்பை அறுத்துநீயும் வாழ்வது   

உலகமாயை தன்னைக்கடக்க தகுதியான வன்எவன் ?
உலகத்தொடர்பு  விட்டவன் *உயிரில்அன்பு கொண்டவன்
தான்தனது தன்னால்என்ற எண்ணம்தன்னை விட்டவன்
தோன்றுகின்ற கோபம்பயம் லாபநஷ்டம் அற்றவன்
தனித்துமே இருப்பவன் மோனப்பித்துப் பிடித்தவன்
பற்றினை அறுத்தவன்  பற்றிடவே அறிதவன்
கருமங்களைச் செய்தபோதும் பலனில்விழைவு அற்றவன்
பெறுவதாக ஏதுமற்ற த்யாகநிலை  கொண்டவன்
உதவியாக  மாந்தருக்கு  சேவைதனைப் புரிபவன்
உலகம்தன்னின் எதிர்மறையின் தாக்கம்எதுவும் அற்றவன்
வேதங்களைக் கூடபக்தி தன்னில்புறக் கணிப்பவன்
சூதில்லாத பக்திதன்னில் அன்புமழை பொழிபவன்
உலகினுக்கு தாரணமாய் விளங்குகின்ற விளக்கவன் 

7. மனநலத்துக் குதவும்நெஞ்சின் மேன்மையினை உணர்ந்திடு
51-57
யாவும்கடந்த பக்திதன்னை எப்படிவிவ ரிப்பது
வாயுமற்ற ஊமைக்கது  இயன்றிடாமல் போகுது
தகுதிகொண்ட நெஞ்சினிலே பக்திஊற்று எடுக்குது
சிலசமயம் நடக்குமிது  இறைவன்கருணை யாலது 

பக்திஉண்மை அன்புமாம் வித்திலாத  சத்துவம்
உலகப்பொருள்கள்  தன்னில்களங்கப் பட்டிடாத சுத்தமாம்
குற்றமற்ற கொற்றமாம் நின்றுவளரும் ஒன்றுமாம்
முற்றிலுமே விளங்கிடாத நுட்பமான உணர்ச்சியாம்

சத்தியத்தை விரைந்துபக்தி நெஞ்சில்கொண்டு சேர்க்குமாம்
அதன்பிறகு நெஞ்சுசத்யம் ஒன்றைமட்டும் நோக்குமாம்
சத்தியத்தைக் கேட்குமாம் சத்யமொன்றே பேசுமாம்
சத்தியமே நித்தியத்தில் பக்தன்நெஞ்சில்  நிலைக்குமாம்

பக்திஎன்பதாவது சத்வரஜசதமசமென்ற முக்குணத்தி லாவது
முந்திசொன்ன நிலைபின்னிருக்கும் நிலையைவிட உயர்ந்தது 
தமசம்உதறித் தள்ளிடு ரஜசத்திலே செயல்படு
உயர்ந்ததான சத்துவத்தை அடையரஜசும் உதறிடு 

8. பற்றிலாதப்  பற்றுடன் பற்றிலானைப் பற்றிடு
58-73
பக்திமார்க்கம் எளியது  மற்றதினும் சிறந்தது
முத்திதர மற்றவற்றின் உதவிதேவை அற்றது
தானேதனக்கு அரசுமாம்  அதனின்தலை இறைவனாம்
பக்திதன்னின் பலனேஅதன்  சாட்சியுமா தாரமாம் 
பக்திதரும் அமைதியிலே கிடைத்திடுமா னந்தமாம்
    
பக்திநெஞ்சின் இறைவன்சேவை விழைந்து ஏற்றபின்னரே
பக்திதன்னின் பலன்கிடைத்து இன்பம்கொண்ட பின்னரும்
பக்திசேவை மனிதசேவை இறைவன்சேவை என்பதாய்
நிறுத்திடாமல் புரிந்திடுநீ  மனதில்அடை இன்பத்தை

இறைவன்புகழைக் கேட்டபிறகு மனிதச்சிறப்பு எதற்கடா?
அவனைஅடைய நினைத்தபிறகு வேறுசெல்வம் ஏனடா ?
அரசனில்லை அழகியில்லை அவனுக்குமோர் இணையடா?
அவனைஎள்ளி நகைப்பவரை தூசுமாக நினையடா.
தானுமில்லை தனக்குமில்லை தேவைஎன்று வாழடா
நான்எனது நானேதானே என்றஅகந்தைத் தள்ளடா
வானில்உறையும் இறையவர்க்கு புரியும்பூசை யாயினும்
மானவரின் சேவைமுன்னர் தூசேஎன்று அறியடா
காணவரும் செயலின்பலனை அவனுக்குமே அளியடா
மனதில்வரும் எதையும்அவனின் பாதத்திலே பொழியடா

சுயம்அழிந்த பக்தியில் முதிர்ச்சிவந்து சேருது
பயம்அழிந்து உணர்வுமே மேலெழும்பிச் செல்லுது
வயம்இழந்த இந்நிலை தலைவன்தலைவி யின்நிலை
ஏவல்புரிந்த சேவகன் தன்னின்நல்ல மனநிலை

இப்படியாய் இருக்கும்அவர் நெஞ்சம்இறைவன் தன்னிலே
படிப்படியாய் உயர்ந்தபக்தி தன்னில்வந்த காதலில் 
அடியவர்கள் இறைபுகழைத் தழுதழுத்த நாவிலே
துடிப்புடனே நெஞ்சடைக்க வழிந்தகண்ணின் நீரிலே
அடிக்கடியே எழுந்துநிற்கும் மயிரின்கூச்சம் தன்னிலே
செடிகொடிகள் மற்றும்உயிர்கள் கொண்டஉலகம் தன்னிலே  
விடிந்திடவே பக்திரசம் சொட்டிடவே நெஞ்சிலே
படிந்திடவே இறைவன்பதம் தூய்மைசெய்யும் பக்தியே

க்ஷேத்திரங்கள் தனக்குமவர்  புனிதம்கொண்டு சேர்ப்பது
புரியும்செயல்கள் யாவிலுமே  பெருமைவந்து சேருது 
மெய்யில்சித்தம் வைத்திருக்கும் அவரில்மெய்யும் உறையுது
பொய்யிலாத பக்தர்தன்னை இறைவன்என்றே சொல்வது
பக்தர்களின் பித்துருக்கள் மகிழ்ச்சியிலே கூடுவர்
மற்றுமுள்ள தேவர்களும் ஆனந்தக் கூத்தாடுவர்
விரிந்திருக்கும் உலகத்தையும் காக்குமவர் அன்புமாம் 
வேற்றுமைகள் யாவும்கடந்து இறையில்ஒன்றி நிற்பவர்
சொற்றொடரில் பட்டிடாத இறைவனுக்கே  நேரிவர்
போற்றிடவே வாழ்ந்திருக்கும் சிறந்த பக்தரானவர்

9. பக்தி நெறியைப் பூண்டிரு  இறையில் வெறியைக் கொண்டிடு
74-81
இறைவன்மீது கொண்டதர்க்கம் தன்னைவிட்டு விலகிடு
புரிந்திடாச்சந் தேகம்பல வந்துதோன்றும்  நெஞ்சிலே
மறந்திடாது பக்தியூட்டும் தெய்வநூல்கள் தன்னையே
முனைப்பினோடு படித்திருக்க  வேண்டும்நீயும் வாழ்விலே
தினத்தினிலே வந்திருக்கும் லாபநஷ்டம் சமத்தில்கொண்டு
இன்பதுன்பப் பிடியிலின்று விடுதலைக்கு நாளைவேண்டி  
காத்திருக்கும் காலம்தொட்டு கணங்கள்தோறும் பக்திகொண்டு
அஹிம்சைநோன்பு பூண்டுசத்ய வழியினிலே நீநடந்து
தூய்மையான நெஞ்சுகொண்டு கருணையிலே இனிமைகொண்டு
உலகிலுள்ள உயிர்களுக்கு செய்யவேண்டும்  அன்புத்தொண்டு  

தனக்குமென்று ஒன்றிலாது பக்திநெறி நெஞ்சில்கொண்டு
இருக்குமந்த பக்தனுக்கு இறைவன்துணை என்றுமுண்டு
சிறந்தவிந்த பக்திகொண்டு உறைந்திருக்கும் பக்தனுக்கு
விரைந்தெழும்பும் கருணைகொண்டு இறைவடிவம் நெஞ்சில்நின்று
முக்திபெற  மனிதனுக்கு   சிறந்ததான யுக்தியாகும்
சத்தியத்தில் உறைந்திருக்கும் இறைவன்காட்சி  சித்தியாகும்
நித்தியத்தில் மனிதனுக்குத் தேவையான சக்தியாகும்
சத்யதர்ம சாந்திப்ரேமை சேர்ந்திருக்கும்  பக்தியாகும்

__________________




No comments:

Post a Comment