Saturday, December 10, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 91 - 107





91. (849-860)
பா⁴ரப்⁴ருத் கதி²தோ யோகீ³ யோகீ³ஶ: ஸர்வகாமத:³ ।
ஆஶ்ரம: ஶ்ரமண:, க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: ॥ 91 ॥

பாரம்தாங்கும் பரமனாம் வேதம்புகழும் இறைவனாம்
யோகப்பலனு மாவன் யோகிரின் தலைவனாம்
சாதகத்தின் முடிவில்தோன்றும் ஈடிலாச் சமாதியாம்
முயன்றயோகம் முடிவுற பிறவிதாண்டி உதவுவான்
ஊழின்முடிவில் அடங்குவான் ஊழைக்கடக்க படகிவன்
காற்றின்மீது மிதப்பவன் காற்றாய்எங்கும் பறப்பவன்     

92. (861-870)
த⁴னுர்த⁴ரோ த⁴னுர்வேதோ³ த³ண்டோ³ த³மயிதா த³ம: ।
அபராஜித: ஸர்வஸஹோ நியன்தானியமோயம: ॥ 92 ॥

வில்லிற்சிறந்த விசயனாம் *கிள்ளிஎடுக்கும் வீரனாம்
அடங்கிடாத ஒருவனாம் அடக்கும்திறனில் தலைவனாம்
வெற்றிகொள்ளும் வீரனாம் போற்றிப்புகழ சூரனாம்
யாவுமே நடத்துவான் யாவுமுறைப் படுத்துவான்

 *கிள்ளி எடுக்கும் = பக்தர் நெஞ்சில் ஊழ் வினைக் களைகளைக்
 கிள்ளி எடுப்பவன்

93. (871-879)
ஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்யத⁴ர்மபராயண: ।
அபி⁴ப்ராய: ப்ரியார்ஹோர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்த⁴ன: ॥ 93 ॥

சத்துவத்தின் தத்துவன் சத்துவத்தில் முத்திவன்
உத்தமத்தில் மனம்கனிந்து தந்தருளும் சத்திவன்
தேர்ந்தெடுக்க ஒருவனாம் ஈரநெஞ்சின் சோதியாம்
தினம்தொழவே மூர்த்தியாம் என்றிருக்கும் ஆதியாம்
கணப்பொழுதும் இடைவிடாது நற்செயலைப் புரிபவன்
மனம்கரைந்து தொழுமடியார் மனம்மகிழும் படியிவன்  

94. (880-888)
விஹாயஸக³திர்ஜ்யோதி: ஸுருசிர்ஹுதபு⁴க்³விபு⁴: ।
ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன: ॥ 94 ॥

போதம்தரும் பாதனாம் தெரியவரும் பாதையாம் 
நிதம்வரும்நல் காலையாம் இதம்தரும்நல் பிறையுமாம்
பகலில்ஒளிரும் சூரியன் இரவில்வான மீன்களாம்
யாவும்அசையக் காரணன் அசைக்கும்வாயு தானிவன் 
புவியில்விளைச்ச லானவன் விளைக்குமாத வன்இவன்

 95. (889-896)
அனந்தோ ஹுதபு⁴க்³போ⁴க்தா ஸுக²தோ³ நைகஜோக்³ரஜ: ।
அனிர்விண்ண: ஸதா³மர்ஷீ லோகதி⁴ஷ்டா²னமத்³பு⁴த: ॥ 95 ॥

முடிவிலாத தோற்றமாம் வடிவலாத அவியவன்*
முடிவிலாது அருள்பவன் முடிவினுக்கோர் முடிவிவன்
என்றும்மலர்ந்து இருப்பவன் மன்னித்துமே அருள்பவன்
உலகம்யாவும் காப்பவன் விளங்குமற்பு தம்இவன்

*அவி = யாகப் பொருள்

96. (897-905)
ஸனாத்ஸனாதனதம: கபில: கபிரவ்யய: ।
ஸ்வஸ்தித:³ ஸ்வஸ்திக்ருத்ஸ்வஸ்தி: ஸ்வஸ்திபு⁴க் ஸ்வஸ்தித³க்ஷிண: ॥ 96 ॥

காலமாய் இருப்பவன் காலம்கடந்த காவலன்
மிளிரும்சிறந்த கோலனாம் வளருமின்ப மாலனாம்
மங்கலங்கள் அருள்பவன் மங்கலத்தின் வடிவமாம்
மங்கலத்தைக் காப்பவன் மங்கலத்தில் மங்கலம்

97. (906-914)
அரௌத்³ர: குண்ட³லீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதஶாஸன: ।
ஶப்³தா³திக:³ ஶப்³த³ஸஹ: ஶிஶிர: ஶர்வரீகர: ॥ 97 ॥

சினத்தைஎன்றும் கொண்டிலன்  சிறந்தகாதின் குண்டலன்
சக்கரத்தின் ஓர்கரன் சிறந்ததான ஓர்பிரான்
மீறிடவே முடிந்திடா வண்ணமாணை இடுபவன்
கூறிடவே சொல்லினால் முடிந்திடாநல்  *பீடவன்
அபயக்குரலில் இறங்குவான் உதவிடவே ஓடுவான்
இதயம்வாடும் உயிர்களுக்கு அமைதிதரும் தாயுமாம்

*பீடு = பெருமை,செருக்கு என இரண்டு பொருள் உண்டு.
நல் பீடு என்பது பெருமை.
நல் பீடவன் என்பது பெருமை உடையவன் என்று குறிக்கும்....

98. (915-922)
அக்ரூர: பேஶலோ த³க்ஷோ த³க்ஷிண:, க்ஷமிணாம்வர: ।
வித்³வத்தமோ வீதப⁴ய: புண்யஶ்ரவணகீர்தன: ॥ 98 ॥

குரூரஎண்ண மற்றவன் கருணைநெஞ்சில் உற்றவன்  
கோர ராவணன்தனை நாளைவருக என்றவன்
மிகுந்தமேன்மை தானிவன் விரைந்துதீமை களைபவன்
புகுந்துமனதில் இனிப்பவன் எழுந்துஉலகைக் காப்பவன்
தெரிந்துசெயலைப் புரிவதிலே சிறந்திருக்கும் சிறப்பிவன்
பயத்தைப்போக்கும் நாரணன்  தூய்மைநல்கும் நாமனாம்*

*நாமன் = நாமம் கொண்டவன்

99. (923-931)
உத்தாரணோ து³ஷ்க்ருதிஹா புண்யோ து³:ஸ்வப்னநாஶன: ।
வீரஹா ரக்ஷண: ஸன்தோ ஜீவன: பர்யவஸ்தி²த: ॥ 99 ॥

உயர்வைநல்கும் உயர்வவன் தீமைபோக்கும் வாய்மையாம் 
தூய்மைசேர்க்கும் மெய்ம்மையாம் தீயகனவு போக்குவான்
கஜனக்காத்த மாலவன்  பூஜைதனில்  அருள்பவன்
உயிர்கொடுத்த உயிரிவன் உயிர்கள்உய்ய உதவுவான்

100. (932-940)
அனந்தரூபோனந்த ஶ்ரீர்ஜிதமன்யுர்ப⁴யாபஹ: ।
சதுரஶ்ரோ க³பீ⁴ராத்மா விதி³ஶோ வ்யாதி³ஶோ தி³ஶ: ॥ 1௦௦ ॥

முடிவில்லாத வடிவினன் அளவிலாத செல்வனாம்
சினமிலாத மனமிவன் அச்சம்போக்கும் அத்தனாம்*
பல்திறத்தின் விற்பனன் ஆழமான ஓர்மனன்
பலதிசையில் பரவுமாறு திறம்படைத்த ஒருவனாம்
பல்பிறப்பில் புரிந்தகரும பலனளிக்கும் இறைவனாம்
தொல்லுலகைப் படைத்துக்காத்து ஆணையிடும் அரசனாம்

*அத்தன் = தந்தை 

101. (941-949)
அனாதி³ர்பூ⁴ர்பு⁴வோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்க³த:³ ।
ஜனநோ ஜனஜன்மாதி³ர்பீ⁴மோ பீ⁴மபராக்ரம: ॥ 1௦1 ॥

உலகமாயை கொண்டுஉயிர்க்கு அறியாமையை விதைத்தவன்
அதனைவென்று வருவதற்கு துணைபுரிந்து அருள்பவன்
அவனையறிந்த  உயிர்களுக்கு முக்திநல்கும் சக்தியாம் 
இவனிலுறையும் வண்ணம்நெஞ்சில் உள்ளாள்என்றும் லக்ஷ்மியாம்
வீரமிகு தீரனாம்கம் பீரமிகு அழகனாம்
உலகைப்படைத்த காரணன் அதனைத்தாங்கும் நாரணன்
*விலகிடவே நினைக்குமுயிர்க்கு அச்சமூட்டும் காலனாம்

*விலகிடவே = அறத்திலிருந்து விலகிடும்

102. (950-958)
ஆதா⁴ரனிலயோதா⁴தா புஷ்பஹாஸ: ப்ரஜாக³ர: ।
ஊர்த்⁴வக:³ ஸத்பதா²சார: ப்ராணத:³ ப்ரணவ: பண: ॥ 1௦2 ॥

நல்லோர்தங்கும்  உறைவிடம்  ஊழில்யார்க்கும்  ஓரிடம்
மலரின்மலர்ச்சி போன்றவன்  கிளர்ச்சிகொண்டு இருப்பவன்
பக்தர்குறையைத் தீர்க்கஇரவும் பகலும்விழித்து  இருப்பவன்
உயர்ந்த பதவி அளிப்பவன் உயர்வில் என்றும் நடத்துவான்
உயிரளித்து தோற்றுவான் அன்பளித்துப் போற்றுவன்
அன்பினுக்கு அடிமையாகி சேவகங்கள் செய்பவன்
  
103. (959-966)
ப்ரமாணம் ப்ராணனிலய: ப்ராணப்⁴ருத் ப்ராணஜீவன: ।
தத்த்வம் தத்த்வவிதே³காத்மா ஜன்மம்ருத்யுஜராதிக:³ ॥ 1௦3 ॥

சத்தியத்தின் தலைவனாம் நித்தியத்தின் உறைவிடம் 
உயிர்கள்தங்க  இருப்பிடம்  அவற்றைஓங்க  வளர்ப்பவன்
எதிலும்சார மானவன் எதுவும்அறிந்த வாய்மையாம்
ஒன்றேஎன்று மானவன்  என்றும் நிலைத்து  நிற்பவன்

104. (967-975)
பூ⁴ர்பு⁴வ: ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ: ।
யஜ்ஞோ யஜ்ஞபதிர்யஜ்வா யஜ்ஞாங்கோ³ யஜ்ஞவாஹன: ॥ 1௦4 ॥

தோன்றும்உலகம் மூன்றையும்  தாங்கும்மரமும்  ஆனவன் 
என்றும்பிறப்பில் ஆழ்த்திடும் மாயவலையை அறுப்பவன்
உற்பத்தியின் பிறப்பிடம் பிறந்திடாத பாட்டனாம்
யாகங்களை ஏற்பவன் யாகங்களின் தலைவனாம்
யோகயாகம் புரிபவன் அவற்றின்மூலம் தெரிபவன்
முயற்ச்சிகொண்டு செய்பவரின் அருகிருந்து உதவுவான்

105. (976-984)
யஜ்ஞப்⁴ருத்³ யஜ்ஞக்ருத்³ யஜ்ஞீ யஜ்ஞபு⁴க் யஜ்ஞஸாத⁴ன: ।
யஜ்ஞான்தக்ருத்³ யஜ்ஞகு³ஹ்யமன்னமன்னாத³ ஏவ ச ॥ 1௦5 ॥

குறையிருந்தும் யாகத்திலே நிறையைமட்டும் கொள்பவ
புரிவதாக அமைந்திருக்கும் யாகம்தனை  படைத்தவ
புரியும்யாகம் உனக்கடா.. மகிழ்ந்துஅருள் புரிபவ
யாகப்பொருளும் நீயடா.. யாகப்பலனும் நீயடா..
யாகத்தில்நீ ரகசியம் பிறகுபுசிக்கும் அரிசியும்
கொண்டிடுவாய் மகிழ்ச்சியும் அளித்திடுவாய் எழுச்சியும்
விண்டிடவே கண்டிடாத நீயுமேஓர் அதிசயம்..!


106. (985-992)
ஆத்மயோனி: ஸ்வயஞ்ஜாதோ வைகா²ன: ஸாமகா³யன: ।
தே³வகீனந்த³ன: ஸ்ரஷ்டா க்ஷிதீஶ: பாபனாஶன: ॥ 1௦6 ॥

பக்தருக்குள் உறைபவன் என்றும் தன்னில் பிறப்பவன்
சித்தத்திலே மாசுதன்னின்  வேரெடுக்கும்  சிறப்பவன்
சாமகான நாயகன் சாமகான மேஇவன்
தேவகியின் மைந்தனாய் மனதைமயக்கும் கண்ணனாய்
புவனம்தன்னைப்   படைத்தவ வாயில்உலகம் கொண்டவ
உயிர்கள்புரிந்த பாவம்யாவும் களையவந்த வாய்மையே ..!

107. (993-1000)
ஶங்க³ப்⁴ருன்னந்த³கீ சக்ரீ ஶார்ங்க³த⁴ன்வா க³தா³த⁴ர: ।
ரதா²ங்க³பாணிரக்ஷோப்⁴ய: ஸர்வப்ரஹரணாயுத:⁴ ॥ 1௦7 ॥

ஒலிக்கும்சங்க  மொன்றொடு  ஒளிரும்வாளின் கூரொடு
சுழளும்சக்க ரத்தொடு மிளிருமோர் கரத்தொடு
சிலிர்க்குநாணின் வில்லொடு பிளக்குமந்த கதையோடு
புலியின்வேகம் கொண்டுநீ ரதத்தின் சக்கரத்தொடு*
எடுத்துதீமை கொல்லவே எழுந்துநின்ற திடமும்நீ
விடுத்துப்பன்மை நீங்கிட இருப்பாய்நெஞ்சில் என்றும்நீ..!

 சக்கரத்தோடு* = பாரதப் போரில் கண்ணன் ரத சக்கரத்தை ஆயுதமாக எடுத்தல்

________________________________________________________________


Prev         First          Next



No comments:

Post a Comment